மந்திரத்தாலும் முறைப்படி பஞ்சாக்கரத்தாலும் புண்டரம் மூன்றனையும் மூவகைப் பொருள்களின் வடிவாக உளத்துட் கொண்டு. முச்சுடர்: ‘சந்திர சூரியாக்கினிகள்; முக்குணம்; சாத்துவிகம்; இராசதம், தாமதம்; முந்நிறம்; வெண்மை, மஞ்சள், செம்மை; முத்தீ; ஆகவனீயம், தட்சணாக்கினியம், காருக பத்தியம். ஐந்துமூ விடத்தும் அழகுற அணிந்தாங் கருக்கற்குச் சந்திநீர் உதவி, இந்திர திசையை நோக்குபு மோனம் எய்திநல் லாதனத் தும்பர்ப், பந்தமில் சுகஞ்சேர் இருக்கைய னாகிப் பஞ்சபூ தத்தைஒன் றொன்றின், உந்துற ஒடுக்கி ஆவியைப் பிரம ரந்திரத் தொடுக்கிய பின்னர். 16 பதினைந்திடத்தினும் பொலிவு பெற அணிந்து அப்பொழுது சூரியனுக்கு அருக்கியங் கொடுத்துக் கீழ்த்திசையை நோக்கி மௌன மாயிருந்து நல்லாசனத்தின்மேல் பந்தத்தினின்று நீங்கிய சுகாசனத்திலிருந்து நில முதலிய ஐம்பூதங்களையும் முறையே ஒன்று ஒன்றிலொடுங்க ஒடுக்கிப் பிராணவாயுவைப் பிரமரந்திரத்தில் ஒடுக்கிய பின்பு. ஒன்றினொன் றொடுக்கல்: பிருதிவியை அப்பினும், ஒடுங்கிய அப்புவைத் தேயுவினும், இதனை வாயுவினும், மூன்றனையும் தன்னுளொடுக்கிய வாயுவை ஆகாயத்தினும் ஒடுக்குதல். பிரமரந்திரம்-பிரமத்தை அடைதற்குக் காரணமான உச்சித் துவாரம். பாதகக் குழிசிப் புலைஉடல் தொடக்கைப் பவனபீ சத்தினால் உணக்கிப், போதர வன்னி பீசத்தால் வேவப் பொடித்தது வாரிபீ சத்தால், சீதமா நனைத்துத் தரணிபீ சத்தால் திரட்டிவே றுறுப்பெலாம் பகுத்து, மேதகச் சத்தி பீசத்தால் நிறைத்து மேயபின் விதியுளி உயிரை. 17 பெரும் பாவங்களுக்குப் பாத்திரமாகிய இழிந்த பந்தமாகிய உடலை வாயு பீசாட்சரத்தினால் உலர்த்தி, மீள ஆக்கினேய மந்திரத்தால் வேவ நீறாக்கி, அதனை வாருண பீசாட்சரத்தால் குளிர நனைத்துத் பிருதிவி பீச மந்திரத்தால் ஒரு சேரத்திரட்டி மேன்மை பொருந்திய சத்தி பீசாட்சரத்தால் சிர முதலாக வெவ்வே றுறுப்பெல்லாம் பகுத்து நிறைவித்து மேவிய பின் விதிவழி உயிரை; பாவனையால் அழித்து, ஆக்குதல், இருவினைகளுக்குப் பாத்திரமாய்த் தத்துவ தாத்துவிக உடம்பைப் பாவனையால் அழித்து அருள் வடிவான் மீளவும் அமைத்தல்: பூதசுத்தி என்ப. ‘‘வஞ்சவினைக் கொள்கலனாம் உடம்பை” (திருவிளையாடற் புராணம்). ஆசுதீர் உடம்பின் முன்புபோல் இருத்தி அங்கண்ஆ தாரபங் கயத்துத், தேசுறும் வன்ன ரூபியாய் நிறைந்த தேவியை முறைவழா தமைத்துப், பேசிரு பத்தோ ராயிரத் தறுநூ றுயிர்ப்பினைப் பிரித்தச பையினான், மாசறும் ஆனை முகப்பிரான் முதலோர் மகிழ்வுறும் படியவர்க் குதவி. 18 |