சனற்குமாரப் படலம் 121


     காசிகே தாரம் புட்கரங் குருக்கேத் திரங்கடி நைமிசங்களினும்,
ஓசைகொள் காஞ்சி அதிகமென் றுரைப்ப துரைப்பிர மாணமொன்
றன்றால், ஈசனே நீயும் உமையுமே அல்லால் இந்நகர் படைத்தவர்
இல்லை, தேசுற யானேகண்ணுறக் கண்டு தெளிந்ததாம் எந்தஊ
ழியினும்.                                             31

     காசி, கேதாரம், புட்கரம், குருக்கேத்திரம், விளக்கமுடைய
நைமிசவனமுமாகிய இவைகளினும் புகழ் அமைந்த காஞ்சிபுரமே மிக்கது
என்று கூறுவது ஆகமப் பிரமாணமும் ஆகும்; மேலும் ஈசனே, இந்நகரம்
நீயும் உமையம்மையுமே சிருட்டித்தது. இந்நகரம் பிறரால் படைக்கப்பட்ட
தன்று. ஒவ்வோர் கற்ப முடிவினும் யான் நேரிற் கண்டு தெளிந்த திது.

     ஆகம அளவையின் வலியுடைத்து காட்சி. ‘‘சுடலை சேர்வது சொற்பிர
மாணமே” (திருநாவுக்கரசர்) எனவும், “ஆகம அளவையான் உணர்த்தல்
வேண்டா காட்சியளவை தன்னானே உணரப்படும்” (திருக். பரி. உரை. 37)
எனவும் வருவன நினைவு கூர்க.

     புரியுநின் அருளால் உயர்ந்தவர் அநேகர் புரவுபூண் டெட்டுரு
வெடுத்தோய், வரிவிழி உமையாள் மணந்தபே ரின்ப வடிவமே
இடும்பைநோய் அறுக்கும், கருணைவாரிதியே இரங்கிடாய் எமக்குக்
களைகண்நீ யன்றிவே றிலையென், றிருகணீர் சொரிய் நெக்குநெக்குருகி
ஏத்தினான் நாத்தழும் பேற.                              32

     ‘‘உயிர்களைக் காத்தற்பொருட்டு எண்வடிவு கொண்டோனே! வரி
அமைந்த கண்களையுடைய உமையம்மையோடு கலந்த பேரின்ப வடிவே!
பிறவித் துன்பமாகிய நோயை அறுக்கும் கருணைக் கடலே! விரும்பத்தக்க
உனது கருணையால் உயர்ந்தவர் பலர். எமக்குப் பற்றுக்கோடு நீயே யன்றி
வேறில்லையாதலால் இரங்கியருளாய்’’ என்று இருகண்களும் அன்புநீர்
பெருகவும் நாத்தழும் பேறவும் நெகிழ்ந்து துதித்தான் பிரமன்.

     இறைவனின் எண்வடிவை புண்ணியகோடீசப் படலம் 16ஆம் செய்யுளிற்
காண்க.

கச்சபேசர் காட்சி கொடுத்தல்

அறுசீரடி யாசிரிய விருத்தம்

     திசைமாமுகன் வாழ்த்தொலி அஞ்செவியிற் சென்றேறலும்
ஆரருள் உந்துதலான், மிசைவானவர் பூதகணம் புடையின்
மிடையப்பெரு மான்எதிர் நின்றருளி, வசைதீர்தர வேட்ட
வரம்தருகேம் மைந்தாஉரை செய்கென வாய்மலர, இசைபாடினன்
ஓகை துளும்பிடநின் றிதுகூறுத லுற்றனன் வேதியனே.          33

     நான்முகன் வாழ்த்தொலி, திருச்செவியுட் சென்ற அளவே பெறுதற்கரிய
திருவருள் தன்னைச் செலுத்துதலால், ஆகாயத்தில்