122காஞ்சிப் புராணம்


தேவரும் பூதகணங்களும் மருங்கில் நெருங்கப் பெருமான் எதிர்நின்று
‘‘குற்றந்தீர நீ விரும்பிய வரத்தைத் தருவேம் மைந்தனே! உரை செய்க’’
எனத்  திருவாய் மலர்ந்தருளக் கேட்ட பிரமன் இசை பாடினனாய் மகிழ்ச்சி
ததும்ப நின்றிதனைக் கூறுவான்.

     நின்றொண்டு வழாதவன் என்புதல்வன் நீடுந்தவ முற்று
சனற்குமரன், முன்றிண்சத கோட்டிடை நின்இருதாள் முன்னிச்சிவ
யோகு முயன்றுதவத், தொன்றும்பொழு தாயிடை நீவருதல்
உணர்ந்தானலன் நிட்டை கருத்துறலால், அன்றங்கருள் நந்தி
சபித்ததனால் அமர்ஒட்டக ஆக்கையன் ஆயினனே.            34

     எனக்கு மகனாகிய நெடிய தவம் முற்றுப்பெற்ற சனற்குமாரன் நினக்குச்
செய்தொண்டில் பிழைபடா தவனாய் முன்னர்த் திண்ணிய சதசிருங்கத்தில்
நின்னிரு தாள்களை நினைந்து சிவயோக முயன்று தவத்தில் மனம்
ஒன்றியபோது அங்கு நீ எழுந்தருளுதலை உணர்ந்திலன்; அதற்குக்
காரணம் நிட்டையில் நிலைத்தமையால்; அவ்விடத்தப்பொழுது அருளுடைய
நந்திபிரான் சாபங் கொடுத்தமையால் பொருந்திய ஒட்டக வடிவினன்
ஆனான்.

பிரமன் நந்திதேவரை வேண்டல்

     இன்றேஇது தீர்த்தரு ளென்னஇரந் தேத்தித்தொழ எந்தையும்
எம்மடியார், நன்றேகொடு செய்தன யாவை அவை நம்மால்விலகா
அத னான்மறையோய், பொன்றா திது நந்தி தவிர்ப்பனெனப்
புரிவுற்றருள் செய்த மறைந்தனனால், அன்றேமல ராளி தவத்திறனால்
அங்குற்றருள் நந்தியை வேண்டுதலும்.                     35

     இப்பொழுதே இவ்வடிவினை நீக்கி அருள் செய்க எனக் குறையிரந்து
துதித்துத் தொழ, எமது தந்தையும், எம்முடைய அடியவர் நன்றென
உட்கொண்டு செய்தன எவையோ அவை நம்மால் விலக்கப் பெறா.
மறைக்குரிய பிரமனே, அதனால் இச்சாபம் அழியாது. நந்தியே அதனை
நீக்குவன் எனக் கருணை செய்து மறைந்தனன். அப்பொழுதே பிரமன் தவ
வன்மையால் அங்கெழுந்தருளிய நந்திதேவரைக் குறையிரப்பவும்.

     அடியவர் பெருமையை அறிவுறுத்தல்: ‘‘ஈசனுக்கிழைத்த குற்றந்
தேசிகன் எண்ணித் தீர்க்கும், தேசிகற்கிழைத்த குற்றந்தேசிகன் தீர்ப்பதன்றிப்
பேசுவதெவனோ’’ (திருவி.இந்.68)

நந்திதேவர் கருணை கூர்தல்

     நந்திப்பெருமானும் மகிழ்ந்தலரோய் நீங்கச்சப ஈசன்
எதிர்ப்படலால், அந்தப்பொழு துன்புதல் வன்பெறுசா பந்தீர்ந்தது
ஆயினும் அன்பர்கள்பால், பந்தித்த பெருங்கரு ணாகரன்என்
பதுநாட்டினன் எம்மிறை நின்புதல்வன், கந்தப்பொழில் சூழ்வட
மேருவின்அங் கண்ணெய்துக இவ்வுரு நீங்குமரோ.             36