124காஞ்சிப் புராணம்


கட்டளையிட்டனன்’’ என்று கூறி, அருள் பெற்றுக் கணத்தவர் போகத் தமது
திருவருட் பார்வையால் ஒட்டகமாகிய குற்றம் நிறைந்த வடிவை நீத்து ஒளி
வடிவு பெற்ற அச்சனற் குமாரரை யாவரும் தமது மாணாக்கரென்று கூற
ஆட்கொண்டனர்.

மேற்படி வேறு

அன்னோன் அவன்பால் தீக்கையுறீஇ வழிபா டாற்றி முழுதுணர்ந்தான்
முன்னர்ப் புராணம் நியாயநூல் கரும முதல்நூல் தருமநூல்
மன்னு சீக்கை ஏழ்சந்தை வழங்கும் ஒன்பான் வியாகரணம்
பன்னும் எண்ணூல் முக்கந்தம் பலவும் முறையின் ஓதினனால். 40

     சனற்குமாரன், திருநந்தி தேவரிடத்துச் சிவதீட்சை பெற்று அவர்
அருள் வழி நின்று முன்னர்ப் புராணங்கள் முற்றவும் உணர்ந்தனன். பின்னர்,
உத்தர மீமாஞ்சையும், முதலாகிய பூர்வ மீமாஞ்சையும், தரும நூலும்,
நிலைபெற்ற சிட்சையும், எழுவகைப்பட்ட சந்தையும், ஒன்பது வகைப்பட்டு
வழங்கும் வியாகரணமும், சொல்லும் சோதிடமும் மூன்று வகைப்பட்ட
கந்தமும் ஏனைய பல நூல்களாகிய அவற்றையும் முறையாகக் கற்று.

ஏயுங் கற்ப சூத்திரங்கள் இருக்கு முதலா நான்மறைகள்
ஆயுள் வேதம் வில்வேதம் அமல்காந் தருவம் அருத்தநூல்
பாய பலவும் விதிமுறையாற் பயின்று நந்திப்பிரான் அருள்சேர்
தூய முனிவன் பின்னரும்ஒன் றிரந்து வேண்டித் தொழுதுரைப்பான். 41

     இவைகளோ, டமைந்த கற்ப சூத்திரங்களும், இருக்கு முதலிய நான்கு
வேதங்களும், ஆயுள் வேதமும், நிறைந்த வில்வித்தையும், இசை நூலும்,
தருக்க நூலும் ஆகிய பரந்த பல நூல்களையும் நூலில் விதித்தபடி பயின்று
நந்திதேவரது திருவருளையடைந்த களங்கமில்லாத சனற்குமார முனிவர்
பின்னுமொரு பொருளைக்குறையிரந்து வணங்கிக்கூறுவர்.

சனற்குமார முனிவர் வேண்டுகோள்

மேற்படி வேறு

உன்புடைக் கல்வி யெல்லாம் உணர்ந்தனன் அவைகள் எங்கும்
இன்புடைச் சிவப்பே றொன்றே முத்திஎன் றியம்பும் எந்தாய்
புன்புலை உடம்பு நீங்கிப் பரவெளிப் பொருளைக் கூடும்
அன்புடைப் பசுவே அன்றோ சிவன் இயல் பதனைச் சேரும். 42

     உன்னிடத்துக் கலைகள் அனைத்தையும் உணர்ந்தேன். அந்நூல்கள்
யாண்டும் இன்பத்தைத் தனக்கு உரிமையாகவுடைய சிவத்தைப் பெறுதல்
ஒன்றே வீடுபேறென்று கூறும். எந்தையே! மிக இழிந்த உடம்பினைக்
கைவிட்டுச் சிதாகாயமெனும் திருவருளொடு கூடுகின்ற தலையன்பினையுடைய
ஆன்மாவே சிவத்துவம் பெறும்.