சனற்குமாரப் படலம் 125


மானிடன் விசும்பைத் தோல்போற் சுருட்டுதல் வல்லோ னாயின்
ஈனமில் சிவனைக் காணா திடும்பைதீர் வீடும் எய்தும்
மானமார் சுருதி கூறும் வழக்கிவை ஆத லாலே
ஆனமர் இறையைக் காணும் உபாயமே அறிதல் வேண்டும்.    43

     மானிடன் ஆகாயத்தைத் தோல்போற் சுருட்ட வல்லனானால்
தாழ்வில்லாத சிவபிரானைத் தரிசித்தலின்றிப் பிறவித் துன்பத்தினின்று நீங்கி
முத்தி அடையக்கூடும் என்று பெருமை நிறைந்த வேதங்கள் எடுத்துக் கூறும்
வழக்கு இவையாதலால், விடையூரும் பெருமானைக் கண்டு தரிசிக்கும்
ஏதுவையே அறிதல் வேண்டும்.

     இவ்வுவமம் பின்னும் வருமாறு: ‘‘வளிதாழ் விசும்பைப் பசுந்தோல்
போற் சுருட்ட வல்லோர், உளரேல் புடை வீங்கி எழுந்து திரண்டு உருண்ட,
இளவெம்முலை பங்கனையன்றியும் இன்ப முத்தி, அளவிற் பெறலாம்என
விண்ட ததர்வ வேதம்’’ (வயிர.12). உவமம் சிறிது வேறுபடவும்
வரும்:  ‘‘பரசிவன் உணர்ச்சி இன்றிப் பல்லுயிர்த் தொகையும் என்றும்,
விரவிய துயர்க்கீ றெய்தி வீடுபே றடைதும் என்றல், உருவமில் விசும்பிற்
றோலை உரித்துடுப் பதற்கொப் பென்றே, பெருமறை இயம்பிற் றென்னில்
பின்னும்ஓர் சான்றும் உண்டோ’’ (கந்தபுராணம் உபதேசப் படலம்).

ஆங்கது பலவாற் றானும் அருளினை அவற்றி னுள்ளும்
தீங்கற எளிதில் கூடும் உபாயமுஞ் செப்பு கென்னா
ஓங்குசீர்ச் சனற்கு மாரன் உரைத்தலுஞ் செவிம டுத்து
வீங்குபே ருவகை பூப்ப விளம்புவான் நந்தி எங்கோன்.    44

     முத்திபெறும் உபாயத்தினைப் பலவகையாலும் அருள் செய்தீர்.
அப்பலவுள்ளும் குற்றமற எளிதாக அடையும் உபாயத்தையும் சொல்லக்
கடவீர் என்று சிறப்புமிகு சனற்குமார முனிவர் வினவியபோது நந்தி
தேவராகிய எமது பெருமானார் திருச்செவி சாத்திப் பெருமகிழ்வு மிகத்
தோன்றக் கூறியருளுவார்.

நந்திதேவர் அனுக்கிரகம்

அருள்பெறு சனற் குமாரன் அறுமுகன் கூறென் றுன்னைச்
சுருதியிற் கிளந்த வாற்றால் அறிவினில் தூயை முற்றும்
இருளற உணர்ந்தாய் நீயே இருந்தவத் தலைவன் கேட்டி
மருளிதீர்ந் துலக முய்ய வினாயது வகுத்துச் சொல்வாம்.    45

     பெரிய தவசிரேட்டனே! கேளாய், திருவருள் பெற்ற சனற்குமார
முனிவன் முருகப் பெருமான் அம்சம் என்று உன்னை வேதத்திற் கூறிய
முறையால், நீயே அறிவில் தூய்மை உடையாய். ஆதலின், நாம் கூறிய நூல்
முழுமையும் அறியாமை அறத் தெரிந்தாய். உயிர்கள் குற்றத்தினின்று நீங்கிக்
கடைத்தேற நீ வினாவியதையும் வகைப்படுத்திக் கூறுவாம்.