அந்தணர் அரசர் நாய்கர் இருபிறப் பாளர் வேத மந்திரக் குரியோர் நான்கு வகைநிலை இவர்கட் கென்ப நிந்தையில் பிரம சாரி நிலைஉயர் மனையின் வாழ்க்கை சுந்தர வனத்தின் வாழ்க்கை துறவறம் அந்நான் காமால். 46 | அந்தணரும், அரசரும், வைசியரும், ஆகிய இவர் மூவரும் இருபிறப்பாளர். இவர்கள் வேத மந்திரங்கட்கு உரிமையுடையவர். இவர்கட்கு நால்வகை நிலைகள் கூறுவர். அந்நான் காவன; பிரமசரியம், கிருகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம் என்பன. நால்வகை நிலை: 41ஆம் திருக்குறளின் விசேடவுரை காண்க. ‘நிந்தையில்’ ஏனையவற்றொடும் கூட்டுக. மந்திரத்திற்கென்பது மந்திரக்கு எனக் குறைந்து நின்றது; ‘நலக்கு’ என்றாற் போல (திருக். 149.) உபநயனத்தின் வருமாற்றம் உயிர்வேறோர் உடம்பு பெற்றதுபோலும் ஆதலின் இருபிறப்பு என்ப. ‘நல் வினையால், இக்கலைகளைக் கற்றுத் தான் வேறொரு பிறப்பானமை கூறினான்; (சீவக. 405 உரை). கருநிலைக் கெட்டாம் ஆயுள் பதினொன்று கருதீ ராறாம் வருடத்தின் மறையோ ராதி மூவர்க்கும் மறையின் ஆசான் தெருள்உப நயனஞ் செய்வன் முனிவர்தங் கடன்தீர்த் தற்குப் பொருவிலா மறைகள் அங்கம் ஓதுதற் பொருட்டு மன்னோ. 47 | முனிவர் கடனைச் செய்து முடித்தற்கு ஒப்பில்லாத வேதங்களும், ஆறங்கங்களுமாகிய இவைகளைக் கற்றோதுதற்கு ஆசிரியன், கருவில் நின்ற காலத்திற்கு எட்டாமாண்டில் அந்தணர்க்கும், பதினோராம் ஆண்டில் அரசர்க்கும், பன்னிரண்டாம் ஆண்டில் வைசியர்க்கும் வேதவழி ஞானம் பெற உபநயனம் செய்து முடிப்பான். எனவே, பிறப்பிற்கு ஏழாம் ஆண்டு முதலாகக் கொள்க. ஆங்கதன் பின்னர்க் காமம் அறம்பொருட் பேற்றி னோடும் ஓங்குசீர்ப் பிதிரர் வானோர் கடன்களின் ஒழிவும் வேண்டி மாங்குயிற் கிளவி மென்றோள் மனைவியை மணப்பர் பின்னர்த் தாங்கரும் வனத்துச் செல்வர் தவம்மிகக் கிடைத்தல் வேண்டி. 48 | (பிரமசரிய நிலை முற்றுப்பெற்ற பின்னர்) முனிவர் கடனை முடித்த பின்பு, அறம், பொருள் இன்பங்களைப் பெறலோடும் புகழ் மிகுந்த பிதிரர், தேவர் ஆகிய இவ்விருவகையர் கடன்களை ஒழித்தலுமாகிய இவற்றை விரும்பி மாமரத்திலுள்ள குயிலிசை போலுஞ் சொல்லையும் மெல்லிய தோளையுமுடைய வாழ்க்கைத் துணைவியைக் கொள்வர். பின்னர்ப் பொறுத்தற்கரிய தவமிகவும் நிரம்ப மனைவியொடும் வனம் புகுவர். இங்கே கூறப்படுவனயாவும் மிருதி நூல் வழக்கு என அறிக. திருக்குறள் ஏழாவது அதிகார அவதாரிகையில் பரிமேலழகர் எழுதுவன: அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படூஉம் கடன் மூன்றனுள், முனிவர் கடன் கேள்வியானும், தேவர் கடன், வேள்வியானும், பிதிரர் கடன் புதல்வரைப் பெறுதலானுமல்லது இறுக்கப் படாமையின், அக்கடனிறுத்தற் பொருட்டு நன்மக்களைப் பெறல். |