சனற்குமாரப் படலம் 127


கடனெலாம் விண்ட பின்பு கருதருந் துறவிற் செல்வர்
நடலைகூர் உலக வாழ்வை வெறுத்துநல் லறிவு தூய்தாய்
இடனுடைத் துறவிற் கென்றே இருவகை நியாயத் தோடு
மடனற நன்னூல் பற்றி மறைமுடி வுணர்தல் வேண்டும்.     49

     தேவர் முதலிய மூவர் கடன்களைச் செய்து முடித்த பின்பு
எண்ணுதற்கரிய துறவு பூண்பர். வஞ்சம், பொய், துன்பம் ஆகிய இவை
மிகும் உலக போகங்களை உண்டுமிழ்ந்த சோறுபோல வெறுத்து நல்லறிவு
மேலும் தூயதாய் ஓரிடத்திற் றன்னைச் சிறை செய்து கொள்ளாத பரந்த
இடங்கொண்ட துறவறச் செலவு மேற்கொண்டு இருவகை நியாய
உணர்ச்சியுடன் அறியாமை நீங்கச் சிவஞான நூலைத் துணையாகக் கொண்டு
வேதத்தின் முடிவை அறிய வேண்டும்.

இருவகை நியாயம் பூர்வம் உத்தரம் எனப்பே ரெய்தும்
ஒருவகை சிவபூ சைக்காம் ஒருவகை சிவப்பேற் றிற்காம்
சுருதியே இலிங்கஞ்சொற்சேர்வெடுத்துக்கோள் இடமேசொல்லின்
வருபெயர் இவற்றான் மென்மை வன்மையென் றிவற்றை ஆய்தல். 50

     இருவகைப்பட்ட நியாய நூல்களும் பூர்வ மீமாஞ்சை எனவும் உத்தர
மீமாஞ்சை எனவும் பெயர்பெறும். வேதத்திற் கரும காண்டத்தை
ஆராய்வதாகிய பூர்வ மீமாஞ்சை சிவபூசைக்கு உரியதாகும். ஞான
காண்டத்தை ஆராய்வதாகிய உத்தர மீமாஞ்சை சிவப்பேற்றிற்கு உரியதாகும்.
பேசுமிடத்துச் சுருதியும், இலிங்கமும், சொற்றொடராகிய வாக்கியங்களும்,
எடுத்துக்கோளும், தானமும், குறியீடும் ஆகிய இவ்வறுவகைக் கருவிகளினால்
பொருள்களின் வன்மை மென்மைகளை ஆய்க. சுருதி, இலிங்கம் முதலிய
ஆறும் ஒன்றினொன்று மென்மை ஆவன.

கடப்படு பூசை பூர்வ கருமநூல் நியாயத் தாகும்
தொடக்கம்ஈ றப்பி யாசம் அபூர்வதை பலமே சொல்லின்
எடுத்துரை அருத்த வாதம் இவைசிவப் பேறு கூறற்
கடுத்தஉத் தரநூல் உண்மை துணிவதற் கிலிங்கம் ஆமால்.   51

     கடமையாகக் கொள்ளப்படும் சிவபூசை பூருவமீமாஞ்சையால்
பெறப்படும். சிவப்பேறு கூறற்கு அமைந்த நூல் உத்தரமீமாஞ்சை. உபக்கிரம
உபசங்காரங்கள், அப்பியாசம், அபூர்வதை, பலம், உபபத்தி (எடுத்துரை),
அருத்த வாதம் இவை யாவும் உத்தரமீமாஞ்சையின் பொருளை உண்மை
தெளியக் கருவிகள் ஆகும்.

இரவெரி யாடுந் தேவை இம்முறை துணிந்த ஞானி
பிரணவ மனுவாற் போற்றிப் பேதுறா துடல்சாங் காறும்
பரவிடின் அவற்கு முக்கட் பரன்வெளிப் படுவன் பட்டால்
மருவுபே ரின்பந் துய்த்து விமலனில் வாழ லாமே.        52