உலகெலாம் ஒடுங்கிய அந்நிலையில் சூக்கும ஐந்தொழிலைச் செய்யும் இறைவனை இங்குக் கூறிய முறையில் வைத்துத் தெளிந்த மெய்யறிவுடையோன் பிறழாது பிரணவ மந்திரத்தால் உடம்பழியுமளவும் போற்றித் துதித்திடின் அவனுக்கு முக்கட் பரமன் வெளிப்படுவன். அங்ஙனம் வெளிப்பட்டால் அவ்விமலனோடு இரண்டறக் கலந்து பேரின்பம் நுகர்ந்து என்றும் ஒரு நிலையாக வாழலாம். பின்னவன் மாய வாழ்விற் பிறந்திறான் சிவமே சேர்வன் முன்னருஞ் சிவப்பேற் றிற்கு முறைவரும் உபாயம் ஈதாம் இந்நெறி சிறியோர் யார்க்கும் எளியதன் றெளிதாய் நேராம் அந்நெறி முக்கண் எம்மான் பதிகளின் அமர்தலாகும். 53 | பின்பு .அவன் உலக வாழ்க்கையில் பிறந்தழியாது சிவத்தையே அடைவான். நினைத்தற்கரிய சிவத்தைப் பெறுவதற்கு முறையாக நூல்களின் வரும் உபாயம் இதுவாகும். இவ்வுபாயம் அறிவிற் சிறியோர் யாவர்க்கும் அடைதற்கரியதாகும். அவர்களுக்கு எளிதாய்க் கைகூடும் அவ்வழி முக்கண்களையுடைய எமது இறைவன் திருத்தலங்களில் வாழ்க்கை நடத்துதல் ஆகும். ஆயிடைச் சாக்கா டெய்தின் விலங்குநாய் அடுவான் புள்ளு மேயபுன் மரங்களேனும் வீடுபே றடைவ துண்மை நீயிதற் கையங் கொள்ளேல் என்றலும் நெடிது வாழ்ந்து தூயசீர் நந்தி பாதம் தொழுதெதிர் குமாரன் கூறும். 54 | சிவதலங்களுள் இறந்தால் மிருகமாகிய நாயும், கொடிய பெரிய பறவையும், ஓரிடத்தே மேவிய புல் மரங்களும் முத்தியடைதல் சத்தியம் ஆகும். நீ இதுபற்றிச் சிறிதும் ஐயப்பட வேண்டுவதில்லை என்ற அளவிலே நெடுங் காலம் மகிழ்ச்சியில் மூழ்கிப் பின்னர் பரிசுத்தமாகிய சிறப்பினையுடைய நந்திதேவர் பதங்களைத் தொழுது சனற்குமார முனிவர் எதிர் கூறுவார். சீர்த்தல வாழ்க்கை ஒன்றே செவ்வழி என்றாய் ஐய பார்த்தலத் திறைவன் மேவும் பதிகள்எண் ணிலவாம் மிக்க கீர்த்திசால் அவற்றுள் மேலாய்க் கிளர்சிவப் பேற்றான் முத்தி ஆர்த்தியின் றுதவுந் தானம் யாதுநீ அருளு கென்றான். 55 | ஐயனே, சிவதல வாழ்க்கை ஒன்றே முத்திக்குச் சிறந்த வழி என்று கூறினை, நிலவுலகில் இறைவன் வீற்றிருக்கும் தலங்கள் எண்ணில உள்ளன ஆகும். மிகு புகழமைந்த அத்தலங்களுள் மேலாய்ச் சிறந்த சிவத்தைப் பெறலால் முத்தியைத் துன்பமின்றி எய்துதற்கு இடனாகிய தலம் யாது அதனை நீ அருளுக என்றனன். பெருமுயற்சியின்றிப் பெரும் பயன் பெருமிடம் யாது என்றனர். |