எறுழ்வலித் திரள்தோள் இரணியன் மருமத் திரத்தநீர் வாய்மடுத் தெழுந்த, வெறிமயக் கறுத்த பெருவலி நோக்கி விலக்குறா மும்மல மயக்கும், தெறுகென நரமா மடங்கல்தான் முழுதும் மடங்கலாய்த் திருவடி தாங்கி, உறுவது கடுக்கும் மடங்கலேற் றெருத்தத் தொளியெறி மணிப்பொலந் தவிசின். 2 திருமாலாகிய நரசிங்கம், மிக்க வலியினையும் திரண்ட தோளினையும் உடைய இரணியன் மார்பிடை இரத்தத்தைப் பருகினமையால் தோன்றிய பெருமயக்கை நீக்கிய பேராற்றலை நினைந்து போக்கற்கரிய மும்மலத்தாலாய மயக்கத்தையும் போக்கியருளுக என் றிந்நாள் முழுவடிவமும் சிங்கமேயாய்த் திருவடியைத் தாங்கிப் பெயராது இருத்தலை ஒக்கும் ஆண் சிங்கத்துப் பிடரியின் மிசை ஒளிவீசுகின்ற மணிக ளிழைத்த பொன் மயமான இருக்கையின். எறுழ்வலி, ஒரு பொருட் பன்மொழி. எரியவிர்ந் தனைய துவர்மணிச் சடிலத் தெறிதிரைக் கங்கையூடலைந்து, பருவருங் கேண்மைச் சிறுபிறைக் கிரங்கிப் பற்றித்தன் இருக்கையிற் கொடுபோய்த், தெருமரா தளிப்பான் முழுமதி அணுகிச் செவ்விபார்த் துறைவது மானும், விரிகதிர்த் தரளத் தொங்கல்சூழ் வட்ட வெண்குடை மீமிசை நிழற்ற. 3 எரி ஒளிர்ந்தால் அனைய பவளம் போலும் சடையினிடத்து வீசுகின்ற திரையை உடைய கங்கையால் அலைக்கப் பெற்று வருந்துகின்ற உறவு பூண்ட இளம்பிறைக்கு இரங்கிக் கைப்பற்றித் தனது சந்திர மண்டிலத்திற்குக் கொண்டுபோய் மனங்கவலுறாது காக்கும் பொருட்டுப் பூரணச் சந்திரன் நெருங்கி அதற்குரிய சமயத்தை நோக்கி இருத்தலை ஒக்கும் விரிந்த கிரணங்களை வீசுகின்ற முத்துத் தொங்கல் சூழ்ந்த (சந்திர) வட்டமாகிய வெண்ணிறக் குடைமேல் நிழலைச் செய்ய, எரியும் பவளமும் சடையை நோக்கின ஆகலின் அடுத்து வரலுவமையன்று. ‘அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே’ (தொல் காப்பியம்). தொல்லைநாட் புகழ்கள் எங்கணும் நெருங்கத் துன்றிவெற்றிடங்கள்இன் மையினால், அல்லுறழ் மிடற்றுப் பிரானிடத்துயிர்த்த அற்றைநாட் கீர்த்திகள் இருபால், செல்லிடந் துருவிக் கொட்பபோல் அரிமான் செழுந்தவி சொடுமணிக் குடைக்கீழ், எல்லையும் மேலும் வெள்ளொளி பரப்பும் இடையினிற் சாமரை இரட்ட. 4 பண்டை நாட் புகழ்கள் எவ்விடத்தும் செறிந்து நெருங்கி வெற்றிடங்கள் இல்லாமையால், இருளை ஒத்த கண்டத்தையுடைய பிரானிடத்து (அந்நாள்) உதித்த புகழ்கள் இருமருங்கும் சென்றடையு மிடத்தைத் தேடிச் சுழலும் பரிசு போலச் சிங்கஞ் சுமந்த தவிசிற்கு மேலும் மணிகள் பதித்த குடைக்குக் கீழும் உள்ள எல்லையில் வெள்ளொளி பரப்புமிடையே சாமரைகள் மாறி மாறி மேலொடு கீழ் அசையவும். |