தலவிசேடப் படலம் 131


     வேட்டவேட் டாங்கு வரங்கள்பெற் றேகும் விண்ணவர்
அதுகொடு செருக்கிக் கோட்டமுற் றழியா தறிவுறுப் பவர்போல்
கோட்டமுற் றழிகய முகத்தான், வாட்டிறற் சூரன் முதலியோர்ச்
செகுத்த மருப்பொடு சுடர்வடி நெடுவேல், காட்டிய கரத்தின்
அறுமுகத்தேவுங் கணேசனும் இருபுடை வயங்க               5

     சிவபெருமானிடத்து விரும்பிய பொருளை விரும்பிய போதே பெற்றுச்
செல்லும் விண்ணிடத்தோர் அவ்வரத்தால் இறுமாப்புற்று மனம் மாறுபட்டு
அழியாது வாழ அறிவுறுத்துவோரைப் போலச் செந்நெறியினின்றும் பிறழ்ந்து
கொடு நெறி பயின்று அழிந்த கயமுகாசுரனையும், வாள் வலியுடைய
சூரபதுமன் முதலானோரையும் முறையே அழித்த தந்தத்தையும், சுடர்
விடுகின்ற வடித்த நீண்ட வேலையும் காட்டிய விநாயகப் பிரானும், முருகப்
பெருமானும் இருமருங்கும் விளங்க வீற்றிருக்கவும்.

     வரம்-வரவாற் பெற்ற பெயர்; செல்வம்போல. காட்டுதல், உணர்த்துதல்.

     உருவினிற் பெருமை பெருமைஅன் றுருவிற் சிறுமையெய்
தினும்உமை பாகன், அருளினிற் பெருமை பெருமைஎன் றுலக
அகிலமுந் தெளிதரக் காட்டி, மருமலர்க் கிழவன் முதலியோர் புறத்து
மன்னிட நகுநடைக் குறுத்தாட், பெருவயிற் றழல்கால் குழிவிழிப்
பூதப் பெருங்கணம் அருகுநின் றேத்த.                      6

     வடிவால் வரும் பெருமை உண்மையிற் பெருமையுடைத்தன்று; சிறிய
சிறுமையுள்ள வடிவு பெற்றிருப்பினும் உமையொருபாகன் அருளால் வரும்
பெருமையே பெருமை என்று எல்லா உலகங்களுக்கும் தெளியும்படி
உணர்த்திப் பிரமன் முதலியோர் நெருங்காமல் புறத்தொரு பக்கம்
காத்திருப்பக், கண்டோர் நகுதற்குக் காரணமான நடையினையுடைய குறிய
தாளையும், பெரிய வயிற்றினையும், நெருப்பை உமிழும் குழிந்த
கண்களையுமுடைய பெரிய பூதகணங்கள் பக்கங்களினின்று துதிக்கவும்.

     “இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற, ஒளியோ டொழுகப்படும்”
(திருக். 698) என்புழிக் காண்க.

     கண்ணிணைக் கடங்காத் திருவுரு வழகைக் காண்தொறும்
பண்டுதான் கொண்ட, பெண்ணுரு வெடுப்பக் கருதிநீள் முகுந்தன்
பிரிவிலா தொருபுடை அமர்ந்த, பண்ணிசை மொழியாள் வனப்பும்
எம் பெருமான் பார்வையும் நோக்கிமற் றெமக்கீங், கெண்ணிய
எண்ணம் முற்றுறா தினியென் றெழுந்தவக் கருத்தினை மீட்ப.    7

     இருவிழிகளுக்கு அடங்காத இறைவனின் திருவுருவப் பேரழகைக்
காணுந்தொறும் முன்பு தான் கொண்ட மோகினி வடிவெடுப்ப நினைந்து
திருமால் இடப்பாகங்கொண்ட பண்ணிசை மொழியினளாகிய அம்மையின்
பேரழகையும் இறைவன் அம்மையையே நோக்கலின் அப்பார்வையையும்
கண்டு இவ்விடத்து நினைத்த நினைவு எமக்கு முற்றுப்பெறாது. இப்பொழுது
என்றெழுந்த எண்ணத்தை மீட்டடக்கவும்.