செவ்வரி பரவி அகன்ற மையுண்கண்ணையும் பூரித்த கொங்கையையும் உடைய தேவியே, கேட்டி. யாம் சிதாகாசப் பரப்பிற்றங்குந் தன்மையை யுடையோம். எவ் வுலகத்தும் கலந்து நிறைந்து நிற்போம். எமது நான்காம் பாதம் தரைமுத லுலகங்களிற் பொருந்தும் மூன்று பாதங்களும் மேலுலகங்களிற் பொருந்தும். உயிர்களோடு ஒன்றாய் வேறாய் உடனாய் நிற்பேம் என்றருளினர். ஆவகை வயங்கு நம்மை யாவரும் அறிய மாட்டார் ஓவரும் பெருமை சான்ற உத்தம தலங்கள் தம்மின் ஏவருங் காண வாழ்வேம் என்றலும் உவகை பொங்கி யாவைஅத் தலங்கள் என்றாட் கெம்பிரான் அருளிச் செய்வார். 14 | ‘அவ்வகையாக விளங்கும் நம்மை எவரும் அறியும் வலியிலர். ஒழிவில்லாத பெருமை மிக்க உத்தம தலங்களில் யாவருங் காண வாழ்கின்றோம்’ என்றருள் செய்ய, மகிழ் கூர்ந்து ‘அங்ஙனம் விளங்கும் தலங்கள் யாவை’ என்று வினவிய அம்மைக்கு எமது பெருமான் அருள் செய்வார். மேற்படி வேறு திருச்சேது ஆலவாய் சிராப்பள்ளி திருவழுவூர் திருவையாறு, தருச்சூழும் இடைமருதூர் யாம்என்றும் நடம்புரியச் சலியாத் தில்லை, கருச்சாடு முதுகுன்றம் அருணகிரி திருவிரிஞ்சை கவினார் ஓத்தூர், மருச்சூழுங் குழல்உமையே நின்னொடுயாம் மகிழ்ந்துறையும் வளஞ்சூழ் காஞ்சி 15 மணங்கமழும் கூந்தலையுடைய உமையே, திருச்சேது, (இராமேசம்) திரு ஆலவாய் (மதுரை), திரிசிராப்பள்ளி, திருவழுவூர், திருவையாறு, சோலை சூழும் திருவிடைமருதூர், யாமென்றும் தளராது நடம்புரியுந் தில்லை, பிறவியைப் போக்குகின்ற திருமுது குன்றம் (பழமலை), திருவண்ணாமலை, விரிஞ்சிபுரம், அழகு நிறைந்த திருவோத்தூர் யாம் நின்னுடன் மகிழ்ந்து வீற்றிருக்கும் வளஞ்சூழ் காஞ்சி. ‘‘என்றும் இவர், ஆடப் பதம்சலியார் ஆக்கினார்’’ (சிதம்.மு.21). புரிதல்-எப்பொழுதும் மேற்கோடல் (சிவ சூ2); எப்பொழுதும் சொல்லுதல் (திருக் பரி-5). எப்பொழுதும் என்பது ஈரிடத்தும் பெற்றாம். ஆலவனம் காளத்தி திருச்சயிலம் சித்தவடம் அடியார் சைவக் கோலநிறை விரூபாக்கந் திரியம்ப கந்திருக்கோ கன்னம் இன்பம் சாலஉத வுச்சயினி மாகாளம் காசிகே தாரம் என்றும் காலன்உறாப் பிரபாசம் இமயமலை மந்தரம்சீர்க் கயிலை யாதி. 16 | திருவாலங்காடு, திருக்காளத்தி, திருப்பருப்பதம், சித்தவடம், சிவசாதனம் உடைய அடியார் நிறைந்த விரூபாக்கம், திரியம்பகம், திருக்கோகன்னம், சார்ந்தவர்க்கு இன்பம் நிறைய உதவும் உச்சயினியில் மகாகாளம்; காசி, கேதாரம், என்றும் யமபயம் இல்லாத பிரபாசம், இமயமலை, மந்தரம், சிறப்புடைய கயிலை முதலிய. |