இந்திரன் தேவகுருவிடம் முறைகூறல் இவ்வர சியற்கை தன்னில் இனிஎனக் காசை இல்லை அவ்விதி முகுந்தன் ஏனோர் வாழ்க்கையும் அவாவு கில்லேன் மெய்வகை உணர்ந்து முத்தி மேவுதற் குபாயம் ஒன்று செவ்வன்ஓர்ந் துரைத்தி என்னத் தேசிகன் தேர்ந்து சொல்வான். | ‘இனி எனக்கு இவ்வரசு நடாத்துதலில் விருப்பமில்லை. பிரமன், மால், பிறருடைய பதங்களையும் விரும்புகிலேன். பொய்த்திறம் தவிர்ந்து மெய்வகை உணர்ந்து முத்தியை அடைதற்குரிய தலையாய உபாயத்தை ஆராய்ந்து செவ்விதாக உரைத்தருள்க’ என இந்திரன் கூற ஆசாரியன் ஆய்ந்து சொல்வான். இந்திரனுக்குத் தேவகுரு உபதேசித்தல் நன்றுநீ வினாய முத்தி நற்றவம் வேள்வி தானம் கன்றுபட் டினிவே றொன்றார் காண்பரி தாகும் மைந்தா துன்றிய மாய வாழ்க்கைத் தொடக்கறுத் துய்யக் கொள்வான் என்றும்எம் பெருமான் உள்ளான் அவன் திறம் இயம்பக் கேட்டி. | மைந்தனே, நீ முத்தியை வினாவுவது நலம்பயப்பது. நல்ல தவம், யாகம், தானம், உடம்பு வருந்துதற்குக் காரணமாகிய உபவாசம், முதலியவற்றானும் இவைபோன்ற பிற வழியானும் காண்டல் இயலாததாகும். தொடர்பு பட்ட வஞ்சக வாழ்க்கையின் பந்தம் அறுத்துப் பிழைக்கச் செய்பவன் எப்பொழுதும் எமது பெருமான் உள்ளனன். அவன் இயல்பு சொல்லக் கேட்டி. என்றும் உள்ளான் பெத்தத்தும் முத்தியினும் அருளுதல் குறித்தது. “எப்போதும் இனியான்” (திருநா-7.) கலி விருத்தம் குறைவிலா மங்கலக் குணத்தன் ஆதலின் நிறைமலம் அநாதியின் நீங்கி நிற்றலின் அறைகுவர் சிவனென அறிவின் மேலவர் இறையவன் பெருமையை யாவர் கூறுவார். 23 | குறைவின்றி நிறைந்த மங்கல குணத்தை உடையவன் ஆதலாலும் நிறைந்த ஆணவ மலத்தினின்றும் இயல்பாகவே நீங்கி நிற்றலாலும் அறிவினால் மிக்கோர் சிவனென அவனைக் கூறுவர். இறைவனுடைய பெருமையை யாவரே முற்றக் கூறவல்லவர். மேலெனப் படுவன எவைக்கும் மேலவன் மாலெனப் படுவன் எவையும் மாற்றுவான் நூலெனப் படுவன எலாம்நு வன்றவன் வேலெனப் படும்விழி பாகம் மேயினான். 24 | |