’மிக்குச் செல்கின்ற போரேற்று வந்துளோம், ஆகலின், தண்டக நாட்டிலுறை தவத்தரும், பிணியுடையரும், பெண்டிரும் ஆகிய நீவிர் விரும்பி இப்பொழுதே நுமக்குப் பாதுகாப்பாகிய இடத்திற்குச் செல்லுமின்’ என எண்டிசையினும் ஆரவாரிப்பப் பேரொலியாகிய பறையால் முழக்கிக் கூறி. நீர்ச் செலவின் எழுந்த பேரொலியைத் தற்குறிப்பேற்றத்தானும், பறையாக்கிய உருவகத்தானும் போர் நிகழ்த்தி கூறினார். இறாற்றிகி ரிப்படை தாங்கி இபக்கோ டறாத்திறல் வெஞ்சிலை காந்தள் அரும்பு நறாப்பயில் கோலென ஏந்திநல் வீர மறாப்பகை மாய்த்துற வெட்சி மலைந்து. 22 | தேனடையாகிய சக்கரப் படைதாங்கி, யானைத் தந்தத்தை வன்மை அமைந்த கொடிய வில்லாகவும், காந்தள் அரும்பினை விடம் பூசிய அம்பாகவும் ஏந்திப் பிறக்கிடாத வீரமுடைய பகையை அழிக்க வெட்சி மாலையைச் சூடி. கொல்லுதலின் அம்பிற்குக் கோலெனப் பெயர் அமைந்தது; வெல்லுதல் வேல்போல. மலைதல்-மாறுபாட்டொடு சூடுதல். முல்லையின் வேந்து முடித்த கரந்தை ஒல்லை அலைத்துயர் ஆனிரை பற்றி மெல்லிதழ் தின்று சிவந்தெழு வேய்த்தோள் நல்லவர் கற்பை யழித்து நடந்து. 23 | முல்லை நிலமாகிய அரசு கொண்ட கரந்தையை எளிதில் அழித்துப் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து மெல்லிய உதட்டை அதுக்கிச் சிவந்து மூங்கில் போலும் தோளினையுடைய ஆய்ச்சியர் கற்பினை அழித்து நடந்து. பசு நிரைகளைக் கவர்வோர் வெட்சி மாலையையும், அவற்றை மீட்போர் கரந்தை மாலையையும் சூடுதல் மரபு. உதட்டைக் கடித்தல்-சினக்குறிப்பு, ஆற்றிற்குக் கொள்ளுங்கால், மெல்லிய இதழ் (பூ) களை அழித்து எனவும், முல்லைக் கொடியை அழித்து எனவும் பொருள் கொள்க முல்லை இன் வேண்டா வழிச்சாரியை. வஞ்சி மலைந்தழல் பாலையை வாட்டி அஞ்சி யிடாதுதன் ஆணை யிருத்தி எஞ்ச லுறாமரு தத்திறை யோடும் வெஞ்சம ரேற்றுழி ஞைத்துணர் வேய்ந்து. 24 | வஞ்சி மாலையைச் சூடி அஞ்சிப் பின்னிடாது, அழலுகின்ற பாலையைக் கெடுத்துத் தன் ஆட்சியை நிறுவி, உழிஞை மாலையைச் சூடி வளங் குறையாத மருதமாகிய அரசொடு கொடிய போரை மேற்கொண்டு, |