172காஞ்சிப் புராணம்


     ஒன்பது கிரகங்களையும், இருபத்தேழு நட்சத்திரங்களையும் துன்பம்
உறாதபடி கட்டி அசைக்கின்ற துருவ நட்சத்திரத்தி னின்றும் கயிற்றை வலிய
பனைமரம் போன்ற துதிக்கையாற் பறித்து விருப்பம் மருவிய நவமணி
மாலையாக அணிந்தும்,

     துருவன் செய்கை: ‘துருவனார் பிணித்துச் சுற்றுஞ் சூத்திரந்தட்பக்
கொட்கும், உருவவான் கோளும் நாளும்’ (கச்சி. காஞ். நக. 267.)

என்னைநீர் கண்டெழா திருப்ப தென்னெனப்
பன்னகம் எவற்றையுங் கனன்று பற்றிவான்
மன்னிட வீசிஅங் குடைந்த வான்நதி
தன்னுடைத் தந்தைபோற் சடிலத் தேந்தியும்.       20

     என்னை நீர் கண்டு எழுந்து நில்லாமை என்ன காரணம் என்னப் பல
மலைகளையும் வெகுண்டு பற்றி வானில் போம்படி வீசி அதனால் உடைபட்ட
ஆகாய கங்கையைத் தன்னுடைய தந்தையாகிய சிவபிரானைப் போலச்
சடையில் தாங்கியும்,

கலிநிலைத் துறை

இவ்வ கைப்பல சிறுகுறும் பெங்கணும் இயற்றிக்
கௌவை நீர்விளை யாட்டினிற் காதலன் ஒருநாள்
பௌவம் யாவையும் உழக்கினன் பாற்கடல் புகுந்தான்
கொவ்வை வாய்உமை பயந்தருள் குஞ்சரக் குரிசில்.   21

     இவ்வாறு பல சிறிய திருவிளையாடல்களை யாண்டும் புரிந்து
ஒலியுடைய நீர் விளையாட்டினில் விருப்பினனாகிய ஓர்நாள் கடல்கள்
அனைத்தையும் கலக்கினான்;  கொவ்வைக் கனிபோலும் அதரங்கள்
அமைந்த உமையம்மையார் தந்த யானைமுக முடைய பெருமையிற்
சிறந்த பெருமான் திருப்பாற் கடலிற் புகுந்தனன்.

புகுந்து வெள்ளநீர் முழுவதும் புழைக்கையின் மடுத்தான்
மிகுந்த பன்மணி நீருறை உயிர்கள்வெம் பணிக்கோன்
முகுந்தன் உந்தியன் றிருந்தநான் முகப்பிரான் முகுந்தன்
சகுந்த மன்னவன் திருவும்அப் புழைக்கையுள் சார்ந்தார்.   22

     புகுந்து பாற்கடலில் முற்றும் துதிக்கையில் முகந்து கொண்டனன்;
பல்வகையான மணிகளின் தொகையும், நீரில் உறைகின்ற உயிர்
வருக்கங்களும், பாப்பரசாகிய ஆதிசேடனும், திருமாலின் கொப்பூழில்
விளங்குகின்ற நான்முகனும், திருமாலும், பறவை அரசனாகிய கருடனும்,
திருமகளும் அத்துதிக்கையுள் சார்ந்தனர்.

வறுங்க டற்பரப் பகட்டினில் எஞ்சுகூர் மங்கள்  
உறுங்க ரும்பெருஞ் சேற்றிடை ஒளிப்பன முன்னாள்
நறுந்து ழாய்அணி ஆமையை நலிவுறப் பற்றிக்
குறும்ப டக்கிய பிரான்வரு திறங்குறித் தனபோல்.     23