வலம்புரி விநாயகப் படலம் 173


     நீர் வறந்த கடற் பரப்பினது நடுவில் புழைக்கையுள் புகுந்தவை போகப்,
புகாது நின்ற ஆமைகள் மிகக்கரிய பெருஞ்சேற்றில் ஒளிப்பன முற்காலத்தில்
நறிய துழாய் அணியும் திருமாலாகிய ஆமையைப் பற்றிக் கொடுமையை
அடக்கிய பிரான் வருதிறங் கருதின போல.

     துழாய் அணி ஆமை என்பது பாணந்தான் மண்தின்ற பாணமே
என்னும் சொற்றொடர் போன் றின்புறுத்தும், பிரானிடத்து வருதிறங்
குறித்தது போல என்னும் பொருள் தருதலும் காண்க. கச்சபேசப்படலத்துள்
காண்க. ஆடு பகை எனின் குட்டி உறவோ எனக் கொள்க.

மாய மீன்விழி பறித்தவன் முன்வரும் இளவல்
மேய வாறுகண் டனவெனத் துடிப்பன சிலமீன்
பாய பூம்புனல் அரசன்நம் பனுக்கிடுந் திறைபோல்
சேய பன்மணி வயின்தொறும் இமைப்பன சிலவே.     24

     திருமாலாகிய அவதார மீன் கண்ணைப் பறித்த சாத்தனார்க்கு
முன்னே தோன்றிய பிள்ளை வந்தவாறு கண்டு துடிப்பன போலத் துள்ளுவன
சில மீன்கள்; பரவிய பூக்களையுடைய நீ ரரசனாகிய வருணன் விரும்பத்
தக்கவனாகிய விநாயகப் பெருமானுக்கு இறுக்குங் கப்பம்போலச் செந்நிறம்
வாய்ந்த பலமணிகள் சில இடந்தொறும் ஒளிவிடுவன.

ஐயன் வார்செவிக் காற்றினில் அலைகள்மிக் கெறிந்து
வெய்ய பேரொலி காட்டுவ பிறவியன் கடல்கள்
மைய கன்றதம் கிளைவறங் கூர்ந்தமை காணூஉக்
கையெ றிந்தழு திரங்கிவீழ்ந் தரற்றுவ கடுக்கும்.   25

     தலைவனாகிய விநாயகப் பெருமான் நீண்ட காதுகளை அசைத்தலின்
எழுகின்ற காற்றினால் ஏனைய அகன்ற கடல்கள் அலைகள் வேகமாக வீசிப்
பேரொலி மிகச் செய்தல், குற்றமற்ற தம் சுற்றமாகிய பாற்கடல் வறுமை
மிக்கமைகண்டு கையால் வயிற்றிலடித்துக் கொண்டு அழுதிரங்கி வீழ்ந்து
அழுதலை ஒக்கும்.

இன்ன வாறுபாற் கடல்வறந் தழிவுற இருங்கை
தன்னில் ஏற்றநீர் மீளவுந் தரைமிசை விடுத்தான்
அன்ன நீருடன் வீழ்ந்தனர் அயன்அரி முதலோர்
துன்னு நீர்படு துரும்பெனத் திசைதொறுஞ் சிதறி   26

     இங்ஙனம் பாற்கடல் வற்றி அழிவெய்தத் துதிக்கையில் ஏற்ற நீரை
மறுபடியுந் தரைமேல் விடுத்தான். அப்பிரமனும், திருமாலும், ஏனையோரும்
நீரிற்பட்ட துரும்பு போலத் திசைதொறுஞ் சிதறிய நீருடனே வீழ்ந்தனர்.

பின்னர்ஓரிடைத் திரண்டுடன் குழீஇயினர் பெரிதும்
இன்ன லுற்றமை தத்தமுட் பேசினர் எளியோம்
முன்னை நல்வினைப் பயத்தினால் இன்றுமூ துலகம்
தன்னில் வந்தவா மறுபிறப் பெனமதித் தனரால்.    27