பின்பு யாவரும் ஓரிடத்துத் திரண்டு தம்முன் நெருங்கி மிகவுந் துன்ப முற்றமையைத் தங்களுட் கலந்து பேசும் அரிஅயன் முதலோர் புன்மையே மாகிய நாம் முன்பு செய்த நல்வினையின் பயனால் இன்று பழைய வுலகில் வந்தவகை புதிதெனற் குரிய மறு பிறப்பே என எண்ணினர். திருமால் சங்கிழந்தமை அறிதல் மருட்சி தீர்ந்தபின் மாயவன் இடக்கையின் வழுவும் உருட்சி கூர்ந்தவெண் சங்கினைக் காண்கிலன் உயங்கி வெருட்சி கொண்டனன் தேடினன் வியன்திசைப் புறத்துத் தெருட்சி கொண்டது ஒலிப்பது கேட்டனன் செவியில். 28 | திருமால், மயக்கம் நீங்கித் தெளிவு தோன்றிய அளவில் இடக்கையினின்றும் வழுவிய திரண்ட வெள்ளிய பாஞ்ச சன்னியத்தைக் கண்டிலனாய் வருந்தினன்; அஞ்சித் தேடினன்; பரந்த திசைப்புறத்தில் அச்சங்கு தெளிந்து ஒலித்தலைத் தனது செவியிற் கேட்டனன். ஓசை யால்அது பாஞ்சசன் னியமென உணர்ந்தவ் வாசை யிற்சிலர் தமைச்செல விடுத்தனன் அவர்போய் மாசில் ஐங்கரப் பிரான்கணம் வாயிடைக் கொண்ட வேச றுஞ்சுரி முகத்தினைக் கண்டுமீண் டுரைத்தார். 29 | முழக்கினால் அது பாஞ்ச சன்னியத்தின் முழக்கமென உணர்ந்து அவ்வோசை வருந்திசையில் சிலரைச் செல்லச் செலுத்தினான்; அவர் ஓசை வழியே போய்க் குற்றமற்ற ஐங்கரப் பெருமானுடைய கணத்தவருள் ஒருவர் வாயிடைக்கொண்ட தளர்வற ஒலிக்கும் அச்சங்கினைக் கண்டு மீண்டு வந்து கூறினர். திருமால் திருக்கைலை யடைதல் சொன்ன வாசகம் கேட்டுளந் துளங்கிமற் றினிநான் என்னை செய்வல்என் றுசாவினன் கணங்களோ டெழுந்து பன்ன கப்பகை அரசுமேல் கொண்டனன் படர்ந்தான் கன்னி பாகன்வீற் றிருந்தருள் வெள்ளியங் கயிலை. 30 | கணத்தவர் கூறிய உரை கேட்டு மனங்கலங்கி, இனி நான் எவ்வழி அதனைப் பெறுவேன் என்று ஆராய்ந்தான்; குழாத்தொடும் எழுந்து உமையம்மையை யிடங்கொண்ட பெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலைக்குப் பாம்பிற்குப் பகையாகிய கருடன் மேற்கொண்டு சென்றனன். அங்கு நந்திதன் அருளினால் தடைகடந் தணுகி எங்கள் நாயகன் திருமுன்பு வீழ்ந்துதாழ்ந் தெழுந்து பங்க யக்கரம் குவித்துநின் றிமவரை பயந்த நங்கை யோடுறை செவ்விகண் டின்னது நவில்வான். 31 | |