வலம்புரி விநாயகப் படலம் 175


     முதல் வாயிலில் நந்தி தேவர் தம் அருளைப் பெற்றுத் தடை நீங்கி
உள் நெருங்கி ‘எங்கள் நாயகன்’ திருமுன்னர் தாழ்ந்து வீழ்ந்தெழுந்து
தாமரை மலரனைய கரங்களைக் குவித்து நின்று உமையொடும் பெருமான்
எழுந்தருளியுள்ள காலம் நோக்கி இதனை வேண்டுவான்.

அண்ண லேஉன தாணையின் அடியேனன் கடலுள்
கண்வ ளர்ந்தனன் ஆயிடை ஆடல்செய் கணேசப்
பண்ண வன்கடற் புனலொடும் என்னையும் பனைக்கை
யுண்ம டுத்தனன் விடுத்தனன் மீளவும் உலகில்      32

     தலைவனே, உன்னுடைய ஏவலுட்பட்டுத் திருப்பாற் கடலுள் அறிதுயில்
கொள்ளுங்காலை, அவ்விடத்துத் திருவிளையாடலைப் புரியும் கணேசப்
புத்தேள் கடல் நீரொடும் என்னையும் பனையை ஒத்த துதிக்கையில் முகந்து
கொண்டனன்; மீளவும் உலகில் விடுத்தனன்.

     காவல் நிமித்தமாகக் கொள்வன யாவும் சிவபெருமான் கட்டளை
ஆதலின், ‘உனது ஆணையிற் கண் வளர்ந்தனன் என்றனர். தொழிலாற்
றளர்ந்த கண் ஒளிவளர்தல் உறக்கத்தான் ஆகலின், அதனைக் ‘கண்
வளர்தல்’ என்பது வழக்கு.

மறுகு சூழ்மணி மன்றுளாய் நின்னருள் வலியான்
மறுபி றப்பென உய்ந்துநின் பால்வரப் பெற்றேன்
மறுகும் அப்பொழு தென்கையில் வழீஇன சங்கை
மறுவில் ஐங்கரப் பிரான்கணத் தொன்றுவௌ வியதால்.   33

     அன்பர் உள்ளம் சுழன்று சுழன்று வருதற்கிடனாகிய அழகிய
அம்பலவனே!  நின் திருவருள் வலியால் (புனர்ஜன்மம்) மறுபிறப்பென
மதிக்கத்தக்க வகையில் பிழைத்து நின்னிடத்து வரப்பெற்றேன்; மனம்
சுழலும் அப்பொழுது என்கையினின்றும் நழுவிய வலம்புரிச் சங்கைக்
குற்றமில்லாத விநாயகப் பெருமான் கணத்துள் ஒன்று கவர்ந்து கொண்டது.

     தானோர் வழக்கைக் கொண்டு போதலின் ‘மன்றுளாய்’ என்றனர்.
தன்னையும், ஏனை உயிர்களையும் காத்தல் இறைவன் செயலாகலின் ‘நின்
அருள் வலியால் .........உய்ந்து’ என்றும், திருவிளையாடல் ஓர் நலம் குறித்தே
நிற்குமாகலின் ‘மறுஇல்’ என்றும் கூறினார்.

ஐய னேஅது அடியனேன் கரத்தெய்த அருளிச்
செய்ய வேண்டும்என் றிரந்திரந் திறைஞ்சலுஞ் சிறுமான்
கையன் எம்பிரான் கவுரிபாற் கட்கடை செலுத்தி
வையம் உண்டவ கேளென வாய்மலர்ந் தருள்வான்.    34

     தலைவனே, சங்கம் அடியேனன் கரத்தில் வந்து தங்க அருள்
செய்தல்வேண்டும் என்று பலகால் தாழ்ந்து கூறி வணங்குதலும் மானேந்திய
பிரானார் கவுரிபால் கடைக்கண் பார்வையைப் போக்கி உலகினையுண்ட
திருமாலே கேளென்று திருவாய் மலர்ந்தருள் செய்வார்.