176காஞ்சிப் புராணம்


     திருமால் தம் காவல் கடந்த வலம்புரி, பெருமான் காப்பில் இருத்தலின்,
இங்ஙனம் வேண்டினர். உன் மகன் குறும்பினைப்பாராய் எனக் கவுரிபாற்
கட்கடை செலுத்தினர். பிரகிருதி மாயாபுவனாந்தம் வியாபித்துள்ளவர்
ஆகலின், ‘வையம் உண்டவ’ என்றனர்; உனக்குரைப்பது உலகுக் குரைப்பது
ஆம் எனவும் ஆகும்.

வலம்பு ரிந்தபே ராண்மையோய் யாம்இது வல்லேம்
வலம்பு ரிச்சங்கு நீபெறக் காஞ்சியில் வைகி
வலம்பு ரிக்கண பதியைநின் அத்திமால் வரைமேல்
வலம்பு ரிந்துதா பித்தருச் சனைபுரி மரபால்.      35

     வெற்றியைச் செய்த பெருவீரனே!  யாம் இதனைச் செய்யும்
வன்மையுடையேம் அல்லம். பாஞ்சசன்னியத்தை நீ பெறற் பொருட்டுக்
காஞ்சியில் தங்கி வலம்புரிச் சங்கினைத் தருதற்குரிய கணபதியை நின்னுடைய
அத்திகிரியில் எழுந்தருளுவித்து வலம்வந்து முறைப்படி அருச்சனைசெய்

     வலம்புரிந்த பேராண்மை யோய் முன்பின் தொடர்புகளை நோக்குங்
கால் குறிப்பின் இகழ்ந்தது போலும். மேலும், வல்லேம் என்பது அதனை
வலியுறுத்துகிறது. விநாயகரை வழிபாடு செய்து பெறலாயிருக்க அது
செய்யாமையையும் நோக்குக. வல்லேம்: ‘வல்லார் திறை கொடுப்பர், வல்லார்
திறை கொள்வர்’’ இலக்கணக்கொத்தின் ஆசிரியர் காட்டுதலின் இரண்டிற்கும்
வரும் (உடன்பாடு, எதிர்மறை).

திருமால் விநாயகரை வழிபடல்

அன்ன வன்திரு வருளினாற் பெறுகெனும் அருளைச்
சென்னி மேல்கொண்டு விடைகொண்டு மீண்டுகாஞ்சி யினில்
கொன்னும் மேற்றிசை வாயிலார் குகையுடை அத்திக்
கன்ன கந்தனில் வலம்புரிக் கணேசனை இருத்தி.        36

     அவ்வைங்கரப் பிள்ளையின் அருளால் சங்கினைப் பெறுக என்னும்
அருள் வாக்கைச் சிரமேற்கொண்டு விடை பெற்றுக்கொண்டு மீண்டு வந்து
காஞ்சிபுரத்தில், பெருமை மிகும் மேற்றிசையில் வாயில் அமைந்த
குகையுடைய அத்திகிரி யென்னும் கல்மலையில் வலம்புரி விநாயகப்
பெருமானைத் தாபித்து.

தருக்கு நீங்கிஆவாகனம் பாத்தியா சமனம்
அருக்கி யம்புனல் ஆட்டுடை பூணுநூல் கந்த
வருக்கம் தூபதீ பம்பல பண்ணிய வருக்கம்
குருக்கொள சுண்ணமார் பாகடை குளிர்புனல் பிறவும்.   37

     முனைப் பிழந்து வருவித்துக், கால்கழுவு நீர், பருகுநீர், சிரத்தில்
தெளிக்கும் நீர், திருமுழுக்காட்டல், உடை, பூணுநூல், கலவைச் சந்தனம்,
நறும்புகை, விளக்கு, சிற்றுண்டி வகை (நிவேதனம்), நிறங்கொண்ட
வாசனைப்பொடி, அரிய பாக்கு வெற்றிலை, குளிர்ந்த நீர், வேற்றுள்ளனவும்,