வலம்புரி விநாயகப் படலம் 177


ஓங்கு தந்திகா யத்திரி மனுவினால் உதவி
வீங்கு காதலால் வலஞ்செய்து புவியிடை வீழ்ந்தான்
ஆங்கு நின்றுகை கொட்டினன் ஆடினன் அழுதான்
தீங்கு தீர்மறை மொழிகளால் துதிபல செய்தான். 38

     உயர்ந்த விநாயக காயத்திரி மந்திரத்தால் இவற்றை உதவிப்
பெருவிருப்பொடும் வலம் வந்து நிலமுற வணங்கி எழுந்து நின்று கைகொட்டி
ஆடினன்; பாடினன்; அழுதனன்; குற்றம் தவிர்ந்த வேதமந்திரங்களால்
தோத்திரம் பல செய்தனன்.

திருமால் விநாயகரைத் துதித்தல்

கொச்சகக் கலிப்பா

ஐயா மறைமுடிவுந் தேராத ஆனந்த
மெய்யா பிரணவத்தின் உட்பொருளே வேழமுகக்
கையாய் வெளியாய் கரியானே பொன்மையாய்
செய்யாய் பசியாய் பெருங்கருணைத் தெய்வமே.   39

     ஐயனே, வேத வேதாங்தங்களாலும் தெளியப்பெறாத ஆனந்த
வடிவினனே!  சிவசக்தி பிரணவத்தில் தோன்றினமையாலும், ஓங்கார
வடிவமாக விளங்குதலாலும் அதனின் உட்பொருளே! யானை முகமும்,
தும்பிக்கையும் உடையவனே! ஐந்து நிறத் திருமேனியனே! பெருங் கருணையையுடைய தேவே!

     ஐம்பெரும் பூதநாயகன் என்பார் ஐந்து நிறங்களையும் எடுத்தோதினர்.
சச்சிதானந்த வடிவினனே என்பார் ‘மறை முடிவுந் தேராத ஆனந்த 
மெய்யனே’ என்றனர்.

நல்லோர்க்கும் வானோர்க்கும் நண்ணும் இடையூற்றுக்
கில்லாமை நல்க அவதரித்த எம்மானே
வல்லார் முலைஉமையாள் ஈன்ற மழகளிறே
பொல்லார்க்கும் தானவர்க்கும் ஊறிழைக்கும் புத்தேளே.  40

     நல்லவர்க்கும், தேவர்க்கும் நேரும் இடையூற்றினைத் தவிர்த்து
அருள்செய்ய வந்த விக்கினராசனே! சூதாடு கருவியை நிகர்க்கும்
கொங்கையை உடைய உமையம்மை பயந்த இளங்களிறே! கொடியோர்க்கும்,
அசுரர்க்கும் இடையூற்றைச் செய்யும் வேழமுகப்பிரானே!

சூரன்உயிர் உண்டு சுரர் உலகங் காத்தளித்த
வீரனுக்கு முன்பிறந்த வித்தகா முப்புரமுஞ்
சேர உருத்த திருவாளன் ஈன்றெடுத்த
வாரணமே எந்தாய் வலம்புரிக் குஞ்சரமே.        41

     சூரபதுமனை வீட்டித் தேவருலகைக் காவல் செய்தருளிய முருகப்
பெருமானுக்கு முன்னர்த் தோன்றிய சதுரப்பா டுடையவனே! திரிபுரத்தையும்
ஒருங்கு சாய்த்த செல்வன் பயந்து வளர்த்த யானையே! எனது தந்தையே!
வலஞ்சுழித்த தும்பிக்கையுடைய குஞ்சரமே!