களை எடுத்தன்றிப் பயிர்வளர்த்தல் இயலாத வாறு வவ்லசுரர் மாள நல்லசுரர் வாழவல்லை வடிவேல் தொட்டமை பேசப் பெற்றது. பண்ணியமும் வெண்கோடும் பாசாங் குசப்படையும் நண்ணியசெங் கைத்தலத்து நாதா ஒருகோட்டுத் தண்ணிய வெண்பிறைத் தாழ்சடையாய் மெய்யடியார் எண்ணிய எண்ணியாங் கீந்தருளும் வள்ளலே. 42 | மோதகமும், தந்தமும், பாசமும், அங்குசமும் பற்றிய செவ்விய காதலமுடைய நாதனே! ஒற்றைத் தந்தமும், குளிர்ந்த வெள்ளிய பிறைதவழ் சடையும் உடையோனே! உண்மைப் பணிசெய் தொண்டர் எண்ணிய பொருளை எண்ணியவாறே எளிதிற் பெற அருளும் கொடைக் குணம் உடையோனே! வழிபடுவோர்க் கெய்ப்பிடத்தின் வைப்பே உமையாள் விழிகளிப்ப முந்நீர் விளையாடுங் காலை பொழிமதக்கை யூடு புகுந்துவரப் பெற்றேன் இழிவகன்று மெய்த்தூய்மை எய்தினேன் யானே. 43 | அருள்வழி நிற்போர்க்குத் தளர்ச்சி யுற்ற வழித் தாங்கும் திருவே! உமையம்மையார் விழிகளுக்கு விருந்து செய்யக் கடலிற்புகுந்து திருவிளையாடல் செய்தபோது மதம் பொழிகின்ற தும்பிக்கையுட் புகுந்து வெளியில் வந்தமையால் இழிவு தவிர்ந்து புனிதமான உடம்பை அடைந்தேன் யான். இழிவு-‘அழுக்குமெய்’ (சுந்தரர்) அங்கப் பொழுதின் அடியேன் கரத்தகன்ற துங்கப் பணிலம்உனைச் சூழுங் கணநாதன் செங்கைத் தலத்துளதால் செல்வா எனக்கதனை இங்கிப் பொழுதே அளித்தருளாய் என்றிரப்ப. 44 | அவ்விடத் தக்காலத்தில் அடியேன் கரத்தினின்றும் நழுவிய உயர்ந்த பாஞ்ச சன்னியம் உன்னைச் சூழ்ந்தேவல் செய்யும் கணத்தலைவன் செங்கைத் தலத்தில் உள்ளதாகலின் செல்வனே எனக் கதனை இன்னே அளித்தருளாய் என்று குறையிரப்ப, காதலர்க்கு எய்ப்பினில் வைப்பாகலின், இப்பொழுதே அருளுக என்றனர். ‘பின்னை என்னா தருள் செய்வார் பெரிய பெருமானடிகளே’ (திருஞா. ) திருமால் சங்கு பெறுதல் வேண்டுந் திருநெடுமாற் கெங்கோன் வெளிநின்று காண்டகைய பூத கணங்கரத்துக் கொண்டிருந்த மாண்டபுகழ்ச் சங்கம் அளித்தருளி மாயோனே ஈண்டு நினக்கின்னும் வேண்டுவதென் னென்றருள. 45 | |