எம்மை ஈரிடத்துத் தந்து, ஈரிடந் தந்து, இருதொழில் அளித்த பகவனே விருப்பு வெறுப்பகன்ற நின் திருவருளுக்கு இருவேமும் சமமாவேம் இங்ஙனம் ஒத்த எம்மில் என்னைத் தந்தவனைத் தந்திடும் பேற்றில் ஒவ்வாமை காட்டினை என்றனன் பிரமன். என்றசொற் செவிமடுத் தெம்பிரான் உரைசெய்வான் ஒன்றுகேள் மைந்தனே உனக்கிது வேண்டுமேல் சென்றுகாஞ் சியின்எமைப் பூசைசெய் திருத்தியால் மன்றஅங் கெய்திநீ வேட்டவா வழங்குதும். 7 | என்று கூறிய வேண்டுகோளைத் திருச்செவி சாத்திய பெருமானார் திருவாய் மலர்ந்தருளுவர். மைந்தனே! யாம் கூறும் ஒன்றனைக் கேட்பாயாக. திருமாலைப் படைக்கும் ஆற்றல் வேண்டுமாயின் திருக்காஞ்சியை அடைந்து அவ்விடத் தெம்மைப் பூசனைசெய் திருத்தி. யாம் அங்குப் போந்தருளி நீ விரும்பியபடி நிச்சயமாக வழங்குவேம். அருளுவோர் தாமே யாகியும், இட விசேடத்தொடு படுத்து அருளுதலைக் காஞ்சியில் அளிப்பேம் என்றனர். காஞ்சியில் பிரமன் கடவுளை வழிபடல் ஐயுறேல் என்றலும் அம்புயன் தாழ்ந்தெழுந் தொய்யெனக் கச்சியிற் போந்துமை கோன்வளர் கொய்பொழிற் புண்ணிய கோடியின் குணதிசை எய்துதன் பெயரினால் இலிங்கம்ஒன் றிருத்தினான். 8 | ஐயம் கொள்ளாது தெளிக என்ற அளவிலே தாமரையோன் வணங்கி எழுந்து விரையக் காஞ்சியை அடைந்து மலர் கொய் பொழில் சூழ்ந்த உமாபதி தங்கியுள்ள புண்ணிய கோடி இடத்திற்குக் கீழ்த்திசையில் பிரமீசன் என்ற பெயர் அமைந்த ஓர் சிவலிங்கம் தாபித்தான். போக்கரும் பிரமதீர்த் தப்பெயர்ப் பொய்கைஒன் றாக்கினான் அங்குநீ ராடிநல் வினைமுடித் தூக்கமார் அன்பினால் மலரெடுத் துடையவன் பூக்கமழ் சேவடிப் பூசனை செய்தபின். 9 | குற்றமற்ற பிரம தீர்த்தம் என்னும் பெயரினையுடைய தடமொன்றைத் தோற்றுவித்தனன். அத்தீர்த்தத்தில் மூழ்கி அனுட்டானம் முடித்து மலர் கொய்து எழுச்சி பொருந்திய அன்பொடும் உயிர்கள் யாவும் அடிமை ஆகவும், உயிரில் பொருள்கள் யாவும் உடைமையாகவும் உடைய பெருமானுடைய மலர் மணம் கமழும் திருவடிகளைப் பூசனை புரிந்த பின்னே. நான்முகன் வேள்வி செய்தல் தீயவிர் குடங்கையான் திருவுளங் களிவரக் காயழற் சோமயா கஞ்செயக் கருதினான் ஆயஅக் கருத்துணர்ந் தண்டரும் முனிவரும் ஏயினர் ஆயிடை விண்ணவர் கோனொடும். 10 | |