கொண்டு விடுகின்ற அம்பினை யொப்பக் கூர்மை வாய்ந்த முட்கள் பொருந்திய அடிகளையுடைய செடிகள் பலவுடன் விரையும் இயல்பினது. பகைவர் நிலத்தை அழித்துக் கள்ளி நடுதல் பேசப் பெற்றது. மேற்படு கலைமகள் நதியென வேற்றுரு வுறுசால்பிற் கேற்புற அவயவ மவைகளும் ஏத்தெழில் உருமாறித் தோற்றிய வெனஅறல் மிசைவரு தூத்திரள் மணிமலர்கள் போற்றுறு பலகொடி யுடன்எழில் பூத்தணை வதுநதியே. 22 | நதி, மேன்மை பொருந்திய சரசுவதி நதிஆக வேற்று வடிவங் கொண்ட அந்நிலைக்குப் பொருந்த அவள் தன்னுடைய அவயவங்களும் புகழப்பெறும் வடிவுமாறிப் புலப்படுவனபோல நீர்மேல் வரு தூய்மையுடைய மாணிக்கங்களும், மலர்களும், போற்றப்பெறும் பல கொடிகளுடனே அழகு பொலிந்து அணையா நின்றது. முத்துக்களும், நீலோற்பல மலரும், தாமரை மலரும், அரும்பும், செவ்வல்லி மலரும், வஞ்சிக் கொடியும் பிறவும் தழுவி வந்தனவென்க. வருநெறி எதிருறு புரிசைகள் மாளிகை நிரைஅகழுற் றுருமிடி யெனஅதிர் தரும்ஒளி யோடொரு நதிவடிவாய்ப் பருவரல் செய்யஇம் முறைவரு பாரதி செயலதனை முருகலர் அளியென இசைபயில் நாரத முனிகண்டான். 23 | வருவழியில் எதிர்ப்படுகின்ற மதில்கள், மாளிகைகளின் நிரைகள் இவற்றை அகழ்ந்த அச்சந்தரும் இடிபோல, அதிர்ச்சி செய்யும் ஓசையோ டொரு நதியின் வடிவாகித் துன்பத்தைச் செய்யும் இவ்வியல்பொடும் வந்த சரசுவதியின் செயல்தன்னை மணங்கமழும் மலரிடை வண்டினைப்போல இசை பயிலும் நாரத முனிவர் கண்டனர். நாரத முனிவர் நதிவரவு கூறல் மேற்படி வேறு கண்டு செய்யசடை கட்டவிழ ஓடி முனிவன் புண்ட ரீகனை வணங்கிஎதிர் நின்று புகல்வான் அண்டர் நாயகநின் வேள்வியை அழிக்க முனிவு கொண்டு வாணிநதி யாய்க்குறுகு கின்ற னளரோ. 24 | நோக்கிச் சிவந்த சடை பிணிப்பு அவிழ்ந்து சோரும்படி நாரதர் ஓடித் தாமரையோனை வணங்கி முன்நின்று கூறுவார். தேவர் தலைவனே! நீ இயற்றும் யாகத்தை கோபங்கொண்டு அழிக்க விரும்பி சரசுவதி நதி வடிவமாய் நெருங்கி வருகின்றனள். கடிது நீதடை இயற்றுதி யெனக்க ழறலும் படியில் நான்முகன் உளத்தில்உமை பங்கர் இருசே வடிஇ ருத்தினன் அறிந்தனர் அனைத்தும் இறைவர் நெடிய மாயனை விளித்திது நிகழ்த்த லுறுவார். 25 | |