‘விரைவாக நீ அதனைத் தடைசெய்’ என அழுத்தமாகக் கூறிய அளவிலே ஒப்பில்லாத நான்முகன் உமாதேவி நாயகருடைய இரு திருவடிகளையும் மனத்திடை வைத்துத் தியானித்தனன். சிவபிரான் யாவும் அறிந்து நீண்ட வடிவினனாகிய திருமாலை அழைத்திதனைக் கூறுவார். வேள்வி நீவரத ராசஉயர் வேள்வி இறைநாம் வாழி அம்மகம் அழிப்பநதி வாணி வரலால் காழ றக்கடிது காத்திடுதி என்று கருதார் பாழி மும்மதில் அழித்தவர் பணித்த ருளலும். 26 | வரதராசனே! நீ யாக வடிவினன்; நாம் உயர்ந்த யாகத்திற்குரிய பயனை அருள்வோ மாகலின் அதற்குத் தலைவராவேம்; அவ்வேள்வியை அழித்தற்குச் சரசுவதி நதிவடிவாய் வருதலால், அவள் செருக்கொழிய விரைந்து காப்பாய் என்று பகைவருடைய வன்மை அமைந்த முப்புரங்களை அழித்தவர் ஏவிய அளவிலே, வாழி, அசைநிலை; காழ்-உறைப்பு; இங்குச் செருக்கு. நாரணன் நதியைத் தடுத்தல் உந்து வேள்விவினை காப்பமனம் ஊக்கி எதிர்சென் றைந்தி யோசனையில் நாகணை விரித்த தன்மிசை மைந்து நீலமலை போல்வழி மறுத்து மலரோன் தந்தை கண்வளர்தல் கண்டனள் கலைத்த லைவியே. 27 | விருப்பினால் செலுத்தப்படும் வேள்விச் செய்கையைக் காத்தற் பொருட்டு உள்ளம் எழுச்சியுற்று எதிர்போய் ஐந்தி யோசனை தொலைவில் ஆதிசேடனாகிய பாம்பணையை விரித்ததன்மேல் வலிமை அமைந்த நீல மலையைப் போல நதிவரும் வழியைத் தடுத்துப் பிரமனுக்குத்தந்தை அறிதுயில் கொள்ளுதலைச் சரசுவதி கண்டனள். நாகம் என்பதிலுள்ள ‘அம்’ தொக்கது; ‘பெற்றம் ஒன்றுயர்த்த பெருமான்’ என்பது ‘பெற்றொன்றுயர்த்த பெருமான்’ எனவும், ‘வாதம் செயத் திருவுள்ளமே’ என்பது ‘வாது செயத் திருவுள்ளமே’ எனவும் வந்தன போலக் கொள்க. ஊக்கி என்னும் சினை வினை, சென்று என்னும் முதல் வினையொடு முடிந்தது, கண்டு சேயிடை அகன்றுநெறி கண்டு வடபால் மண்டி ஏகஅது நோக்கிஅரி பாதி வழியின் மிண்டி நாப்பண்விழி துஞ்சமலர் வாணி விலகிக் கொண்ட வேகமொடு தென்திசை யுறக்கு றுகினாள். 28 | நெடுந் தொலைவில் வரும்போது நோக்கி அவ்வழியை நீங்கிப் புது வழியை உண்டாக்கி வடதிசை வழிக்கொண்டு மிக்குச் செல்லத், திருமால் அதனை நோக்கிப் பாதி வழியின் நெருங்கி நடுவில் விழிதுயிலச் சரசுவதி விலகி மேற்கொண்ட வேகத்தொடும் தெற்குத் திசையைக் குறுகினள். |