| இறைவன் காட்சி கொடுத்தல்	 		| அங்கண் இலிங்கத்தின் முன்னர் அணைந்து மனைவியர் மூவர் துங்க வசிட்டன் முதலோர் சுராசுரர் சூழ்ந்து துதிப்பத்
 தங்கும் அவைக்கண் இருந்து சம்புவை உள்ளத்தி ருத்திப்
 பொங்கிய அன்பில் தியானம் புரிந்து வழிபடும் போது.     36
 |       சிவாத்தானத்திற் சிவலிங்கப் பெருமான் திருமுன்பு சென்று சரசுவதி,    சாவித்திரி, காயத்திரி என்னும் மனைவியர் மூவரும் தவத்தாலுயர்ந்த
 வசிட்டர் முதலானோரும், தேவரும், அசுரரும் உடன் சூழ்ந்து துதிக்க
 அவர் அவைக்கண் தங்கியிருந்து இறைவனைத் தனது உள்ளத்தில்
 எழுந்தருளுவித்து மேலெழுந்த அன்பினாற் றியானித்து வழிபடுங் காலத்தில்,
      சம்பு-சுகம் உண்டாக்குபவன்; ‘எம்பிரான், இன்பம் ஆக்கலின் சம்பு’    (பரசு.44),
 		| வான இயங்கள் கலிப்ப மலர்மழை அண்டர் சொரிய ஊனமில் சாமரை ஏந்தி உருத்திர மாதர் இரட்டப்
 பான்மை யினாற்கந் தருவர் பாடி விருதெடுத் தோத
 ஞான சனந்தர் முதலோர் நண்ணி இருபுடை யேத்த.    37
 |       தேவ துந்துமிகள் ஒலிக்கவும், தேவர்கள் மலர் மழை பொழியவும்,    உருத்திர மகளிர் குற்றமில்லாத சாமரையை ஏந்தி வீசவும், கந்தருவர் தம்
 இயல்பால் வெற்றிவிருதுகளை எடுத்துப் பாடி புகழவும், ஞானம் கைவரப்
 பெற்ற சனந்தர் முதலானோர் நெருங்கி இருமருங்கும் நின்று துதிக்கவும்.
      சனந்தர் முதலோர்; சனந்தர், சனாதர், சனற்குமாரர், சனகர்     எனப்பெறுவோர், ஊனமில்சாமரை; ‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா’ ஆகலின்
 என்க.
 		| எண்டிசை யாளர் முடிகள் இணையடி தாங்கி நடப்ப வண்டுளர் கோதை உமையை மடித்தல மீதுறக் கொண்டு
 பண்டை மழவிடை ஏறிப் பண்ணவர் தம்பெரு மானும்
 விண்டலம் ஏர்கொள எய்தி விழைதகு காட்சி அளித்தான்.  38
 |       அட்டதிக்குப் பாலர்கள் தமது தலைகளில் இரண்டு திருவடிகளைத்     தாங்கி நடப்பவும், கடவுளர் தலைவனாகிய இறையவனும் வண்டுகளொலிக்கும்
 மலரணிந்த கூந்தலையுடைய உமையம்மையைத் தன் மடித்தலத்தின்மேற்
 பொருந்த இருத்தி பண்டைய இளையவிடையை ஊர்ந்து தேவர் பிரானாரும்
 விண்ணிடமெல்லாம் அழகுவிளங்கத் தோன்றி விரும்பத்தக்க தரிசனம் தந்தருளினர்.
      இணையடி-திருப்பாதுகைகள். என்றும் இளமை மாறாத விடை என்பார்     பண்டை மழவிடை ஏறி என்றனர். ‘‘பழைய மழவிடை ஏறி’’ (திருத். மான.31)
 என்புழிப்போல
 |