சிவாத்தானப் படலம் 191


கண்டு விரிஞ்சன் எழுந்து கரையறு காதல்கை மிக்குக்
கொண்ட புளகங்கள் மல்கக் குவித்தகை சென்னியில் ஏற
விண்ட மொழிகள் குழற இன்பவெள் ளத்திடை ஆடி
மண்டனில் வீழ்ந்து வணங்கி மறைமொழிகொண்டுதுதிப்பான்.   39

     பிரமன் கண்டு இருக்கைவிட்டெழுந்து எல்லையற்ற பேரன்பு கைகடந்து
மயிர் சிலிர்த்தல் மலியவும், குவித்தகைகள் சிரமேலேறவும், நாத்தழுதழுத்து
வெளிப்படு மொழிகள் குழறவும் பேரின்ப வெள்ளத்துள் திளைத்து நிலமுற
வீழ்ந்து வணங்கி மறைமொழிகளால் துதி செய்வான்.

நான்முகன் போற்றி செய்தல்

வேறு

அடியவர் இழைத்த குற்றம் அனந்தமும் பொறுப்பாய் போற்றி
கொடியவர் தம்மைச் செய்யுங் குற்றங்கண் டொறுப்பாய் போற்றி
ஒடிவறு வணக்க முற்றுங் கைக்கொள்ளும் உடையாய் போற்றி
முடிவிலா மொழிகட் கெல்லாம் வாச்சிய முதலே போற்றி.     40

     அடியவர் செய்த குற்றம் அனைத்தையும் பொறுத்துக் கொள்வோனே
வணக்கம். செய்யும் குற்றம் நோக்கி அது தீரத் தீயோரைத் தண்டம்
செய்வோனே வணக்கம். குற்றமற்ற வணக்க முழுதும் கைக் கொள்ளும்
அனைத்துயிரையும் அடிமையாக உடையோனே வணக்கம். அளப்பிலா
மொழிகளாம் வாசகம் அனைத்திற்கும் பொருள்களின் முதற்பொருளே
வணக்கம்.

     பிற தெய்வங்கள் சிற்றறிவும், சிறுதொழிலும், வினைவயமும்,
பிறப்பிறப்பும், சுதந்தர மின்மையும் உடையன. இவை. அநாதியே (இயல்பின்)
நீங்கி உள்ள சிவபெருமானே முற்றறிவும், தனி முழு முதலுமாய்
அத்தெய்வங்களிடமாக நின்று ஏன்றுகொண்டு பயனை அளிப்பவன்.
ஆகலின் வணக்க முழுதும் கைக் கொளுதற்குரிய உரிமை இயல்பாக
உடையன் என்க.

சீதநீர் உலகம் போற்றுந் தேவர்க்குந் தேவே போற்றி
கோதற உண்மை காட்டுங் குரவர்க்கும் குருவே போற்றி
பூதநா யகனே போற்றி புரீசர்க்கும் ஈசா போற்றி
பாதியில் உமையை வைத்த பசுபதி போற்றி போற்றி     41

     குளிர்ந்த நீர் சூழ்ந்த உலகிடை ஆன்மாக்கள் துதி செய்யும்
கடவுளர்க்குக் கடவுளே (தேவ தேவனே) காத்தருள்க! குற்றமற உண்மைப்
பொருளை அனுபவப் பொருளாக உணர்த்தும் ஆசாரியர்க்கும் ஆசாரியனே
காத்தருள்க! ஐம்பெரும்பூதங்களுக்கும் தலைவனே காத்தருள்க! விரும்பப்
படுகின்ற ஐஸ்வரிய சம்பந்தமுடையவர்க்கும் ஈசனே (மகேசனே) காத்தருள்க!
இடப்பாதியில் உமையம்மையை ஏற்றருளிய பசுபதியே காத்தருள்க!
காத்தருள்க! !