உவாமுதற் சிறந்த நாளின் உடைதிரைப் பிரம தீர்த்தத் தவாவுடன் ஆடிச் செய்யுங் கடன்முடித் தடிகேள் உன்னைத் தவாதசீர்ச் சிவாத்தா னத்து வழிபடுந் தகையோர் செல்வக் குவாலொடும் இனிது வாழ்ந்து முத்தியிற் கூடச் செய்யாய். 46 | அடிகளே! பௌர்ணமி, அமாவாசை முதலிய சிறந்த நாட்களில் கரையில் மோதி உடைகின்ற திரையையுடைய பிரம தீர்த்தத்தில் விருப்புடன் மூழ்கிச் செய்யும் அனுட்டானாதிகள் முடித்து உன்னைக்கெடாத சிறப்பினையுடைய சிவாத்தானத் தலத்தில் வழிபாடு செய்யும் தக்கோர் பெருஞ் செல்வக் குவியலொடும் இனிது வாழ்ந்து கழித்து முத்திப் பேற்றினைத் தலைப்படச் செய்வாய், என்றிரந் தேத்த எல்லாம் அருள்புரிந் திலிங்கத் தெங்கோன் ஒன்றினன் அயனும் மாலை உலகொடும் விழுங்கி மீளத் தொன்றுபோல் முறையான் நல்கித் துகளறு சிவாத்தா னத்தின் மன்றவன் அருளான் முன்னர் வைகினன் உவகை கூர்ந்து. 47 | என்று குறையிரந்து துதிக்க யாவும் திருவருள் பாலித்து எம்பெருமானார் சிவலிங்கத்தில் வேறற விளங்கினர். பிரமனும் திருமாலை உலகொடும் ஒடுக்கி மீளவும் அவ்வொடுங்கியவாறே தோற்றுவித்துக் குற்றமற்ற சிவாத்தானத்தில் கூத்தப் பிரானின் திருவருளால் அவர் திருமுன்பு மகிழ்ச்சி மீக்கூர்ந்து வைகினன். எழுசீரடி யாசிரிய விருத்தம் முந்துற மனத்தைத் தோற்றினன் அதன்பால் முழங்குகாயத்திரி யதனில், சந்தைகள் அவற்றிற் சாமம்அச் சாமந் தன்னிடை யெசுர்கள்அங் கவற்றின், மைந்துடை நெடுமால் அவனிடைப் பைங்கூழ் பயிர்களின் மதியம்அம் மதியின், உந்துறும் பசுக்கள் பசுக்களின் மகவான் உவனிடை உலகெலாந் தந்தான். 48 முன்னதாக மனத்தைப் படைத்தனன். அம்மனத்தின்கண் ஒலிக்கின்ற காயத்திரி மந்திரத்தையும், வேதசந்தசுகளும், அவற்றில் சாமவேதத்தையும், அதனிடை எசுர் வேதத்தையும், அங்கவற்றின் வலிமை அமைந்த திருமாலையும், அவரிடைப் பசிய பயிர்களையும், அப்பயிரிடைச் சந்திரனையும், அச்சந்திரனிடத்து வெளிப்படும் பசுக்களும், பசுக்களினின்றும் இந்திரனையும், அவனிடத்து உலகம் யாவையும் உதவினன். சந்தசு-ஆரியயாப்பின் இலக்கணம். இம்முறை ஒருவர் ஒருவரைப் படைத்துச் செருக்கும் மற்றிவர்களைப் பரமென், றும்மைவல் வினையான் மருளுநர் மருள்க உண்மைநூல் உணர்ந்தருள் கூடுஞ், செம்மையோ ரெல்லாம் விழிமிடற் றடக்கித் தேவரைப் புரந்துயர் குணங்கள், மும்மையுங் கடந்த முதல்வனே எவர்க்கும் மூலகா ரணனெனத் தெளிவார். 49 |