மிஞிறு என்பது எழுத்து நிலைமாறி ஞிமிறென்றாயது, சிவிறி விசிறி ஆயதுபோல. இதனை ‘மிஞிறு ஞிமிறாக விளங்க’ (கச்சி.ஆ. 414). உண்மை- தோற்றம். ‘உண்மை பிறத்தலையும்’ (திருக். பரி. 336) அமரரும் அசுரரும் அயன்தனை இரத்தல் பாட்டளி உளரும் கற்பக நறுந்தார்ப் பனிமுடிக் கடவுளர் தாமும், வாட்டிறல் படைத்த அசுரரும் முன்னாள் வல்வினை இறப்பினுக் கஞ்சி, வேட்டனர் சாவா மருந்தினைப் பெறுவான் வெறிநறாக் கொப்புளித் தலர்ந்த, தோட்டணிக் கமலக் கிழவனை எய்தித் துணையடி பழிச்சிநின் றுரைப்பார். 2 இசை பாடி வண்டுகள் சுழலும் கற்பக மலரின் நறிய மாலையை அணிந்த குளிர்ச்சியையுடைய முடி சூடிய தேவரும் வாள் வலிமை படைத்த அசுரரும் முற் காலத்தில் நீக்கலாகா வினைவழி நிகழும் இறப்பினுக்கு அஞ்சிச் சாவாமைக்குக் காரணமாகிய மருந்தினைப் பெறுவான் விரும்பி வாசனை கொண்ட தேனையுமிழ்ந்தலர்ந்த இதழ் வரிசையையுடைய தாமரை மலரில் விளங்கும் பிரமனை அடைந்து இணையடிகளைத்துதித்து நின்றுரைப்பார். கற்பக மலரில் வண்டு மூசாமையின், இனவடை. ‘சாவா மருந்து- உண்ணப்படும் பொருள் அமிர்தம். ‘சாவா மருந்து சாவாமைக்குக் காரணமாகிய மருந்து’ (திருக். பரி. 82). முக்குணப் பகுப்பின் மூவுருக்கொண்டு முத்தொழில் இயற்றி யோய் எங்குந், தொக்கநின் விழிப்பின் இமைப்பினில் எமக்குத் தோற்றமும் ஒடுக்கமும் ஆமால், ஒக்கநாம் இறப்புக் கஞ்சிவந் தடைந்தேம் உலப்புறா திருந்துபோர் புரியத், தக்கதோர் உபாயந் தெரித்தெமக் குரையாய் தலைவனே என்பது கேட்டு. 3 இராசதம், சாத்துவிகம், தாமதம் என்னும் முக்குணப் பகுப்பினால் பிரமன், மால், உருத்திரன் வடிவு கொண்டு படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் யாண்டும் நடாத்துவோய்! உனக்கமைந்த பகலிரவினில் பல்பிறப் பிறப்புக்கள் எங்களுக்கு நிகழும். யாம் ஒருசேர இறப்பினுக்கஞ்சி வந்தடைந்தோம். இறவாது வாழ்ந்து போரைச் செய்யத் தகுந்ததோர் உபாயத்தை ஆராய்ந்து எங்களுக்கு உரைத்தல் வேண்டும் தலைவனே என்று கூறக் கேட்டு, காலபேதம் அதிகாரிகளின் திறத்தால் இங்ஙனம் வருவனஉள. ‘சத்துவ முதலிய குணங்களான் மூவராகிய முதற் கடவுள்’......................... (திருக்.1 ஆம்அதி. அவதாரிகை). பிரமனுக்குரிய ஒரு பகலில் பதினான்கிந்திரர்கள் இறப்பார்கள். காலப்பிரமாணம் என்னும் தலைப்பிற் காண்க. மடநடைக் கலைமான் இளமுலை திளைக்கும் மார்பினான் அவரொடும் எழுந்து, நடலைதீர் காட்சி வைகுந்த வரைப்பின் நண்ணுபு விழியுறக் கண்டான், படவரா அணையின் முனிவரர் பழிச்ச மலர் மகள் பதாம்புயம் வருட, அடர்சிறைக் கலுழன் முதலியோர் சூழ அறிதுயில் அமர்ந்தநா யகனை. 4 |