அசைத்தலும் ஆற்றாது உளம் மெலிந்த அசுரரை எதிர் நிற்கும் தேவர் குழாம் நோக்கி அதிசயிக்கத்தகும் வகையில் உள்ளத் தெழுச்சி கொண்டு நீவிர் இனி விடுமின் விடுமின் என்று நெருங்கி வாசுகியை வலியுடன் பற்றி இழுத்துத் தேவரும் வன்மை யிழந்து இளைத்து நின்றனர். செயத்தக்க வகை இனியாதென யாவரும் மனக்கவலை மிகக் கொள்ளும் அப்பொழுதில், விடுமின் விடுமின் என்னும் அடுக்குத் தாம் வெல்வர் என்னும் துணிவு பற்றியது. வலன்உயிர் செகுத்த வானவன் உயிர்த்த வாலியாங்குரக்கினத் தலைவன், பலகட லிடத்துஞ் சென்றுபாண் டரங்கன் பதாம்புயம் அருச்சனை புரிவான், புலன்உயர் சிறப்பின் ஆயிடை இயல்பாற் போதலும் மாலயன் முதலோர், நலமுற நோக்கி உவகைமீ தூர நல்வர வேற்றுநின் றனரால். 11 வலன் என்னும் அசுரனை அழித்த வலாரி என்னும் இந்திரன் ஈன்ற வாலியாகிய குரங்கரசன் பலகடல்களினும் உள்ள தீவுகளிற் புகுந்து சிவபிரான் திருவடி மலர்களில் அறிவாலுயர்ந்த சிறப்பினால் அருச்சனை புரிவோனாய் அவ்விடத்தில் இயல்பாக வருதலும் பிரமன் மால் முதலானோர் தூரத்தே கண்டுழி இன்முகம் காட்டி மகிழ்ச்சி மேன்மேற் பெருக நல்வருகையான் எதிர்கொண்டனர். வந்தவன் அயனை மாயனை வணங்கி வானவர்க் கஞ்சலி அளித்துச், சிந்தனை ஒருக்கி நீர்இவண் முயலுஞ் செயல்இது என்னென வினவக், கந்தமா மலரோன் உள்ளவா றுரைத்துக் கருதருந் தெய்வம்இங் குன்னைத், தந்ததால் எமக்கு நீதுணை செய்யத் தகுமென இறுத்தனன் அவனும். 12 வந்த வாலி பிரமனையும், மாயனையும் வணங்கி, தேவர்களைக் கைகூப்பித்தொழுது ‘நினைவை ஒருமுகப்படுத்தி நீவிர் இங்கு முயலும் இச்செய்கை என்னை’ என வினவவே, நறுமணங்கமழும், பெருமை பொருந்திய மலரவன் நிகழ்ந்தவாறு கூறி, நினைத்தற்கரிய தெய்வமே இவ்விடத்திப் பொழுது உன்னைக் கொணர்ந்து தந்ததாகலின் எங்கட்கு நீ துணை செய்தல் வேண்டு’ மென விடை கூறினன். அவ்வாலியும், வணங்குமறை: வணங்கி, அஞ்சலி அளித்து என்றமையின் பொது நோக்கொழித்துச் சிறப்பு நோக்குக் கொள்ளவேண்டும். ‘பொது நோக் கொழிமதி புலவர் மாட்டே’ எனவும். (புற. ). தெய்வம் தரல்: ‘தேவரில் பெற்ற’ என்னும் திருக்கோவையாரையும் ‘முயற்சியும் உளப்பாடு மின்றித் தேவராலே பெற்ற’ என்னும் அதன் உரையையும் நோக்குக. பெருவலி படைத்த சுராசுரர் குழுமிப் பெறலருந் திறத்தினில் எளியேன், ஒருவனோ வல்லேன் யாமெலாம் ஒருங்குற் றுததியைக் கடைதுமேல் தெய்வந், தருவது காண்டும் எனநகைத் தியம்பித் தானவர் கடவுள ரெல்லாம், வருகென விளித்து வாலிமா சுணத்தின் வாற்புறம் பற்றிநின் றீர்த்தான். 13 |