விகடக் கூத்தினைப் பூசனையாக் கொண்டு திருமாலுக்குச் சக்கரம் அருளி ‘விகட சக்கரன்’ எனும் திருப் பெயர் பூண்டோனே! வேதங்கள் தொடர்தற்கரிய மெய்யறிவே! மேகம் நாணுறப் பொழியும் மதத்தை யுடையோனே! கண்கள் தாமரைமலரை ஒத்துப் ‘பதுமாக்கன்’ எனப்பெயரிய மாலுக் கருளிய மெய்மையே தலைமைப் பாட்டினனே! குடத்தையும், சக்கரவாகப் பறவையையும், நிகர்த்த கொங்கை உமைக்கு மகனே! எனத்துதித்து வணங்கிக் குயவனது சக்கரமெனச் சுழலுகின்ற பிறவிக் கடலை, நெஞ்சமே! கடப்பாயாக! கடவுள் வாழ்த்து சபா நாயகர் சங்கேந்து மலர்க்குடங்கைப் புத்தேளும் மறைக்கோவுந் தழல்கால் சூலம், அங்கேந்தும் அம்மானும் தத்தமது தொழில்தலைநின் றாற்றச் செய்தோர், பங்கேந்தும் பெருமாட்டி விழிகளிப்ப இருமுனிவர் பணிந்து போற்றக், கொங்கேந்து மணிமன்றுள் குனித்தருளும் பெருவாழ்வைக் குறித்து வாழ்வாம். 3 | பாஞ்ச சன்னியம் கொள்ளும் திருமாலும், வேதனும், நெருப்புமிழும் சூலம் பற்றும் உருத்திரமூர்த்தியும் முறையே காத்தலும், படைத்தலும், அழித்தலுமாகிய செயல்களை மேற்கொள்ள அருள் செய்து சிவகாமியம்மை கண்டு களிக்கவும், பதஞ்சலி வியாக்கிரபாதர் பணிந்து போற்றவும் நறுமணங் கமழும் அழகிய அம்பலத்தின்கண் நடித்தருளும் பெருவாழ்வாம் கூத்தப் பெருமானை உளங்கொள்ளுதலான் வாழ்வோமாக! திருவேகம்ப நாதர் தணந்தபெருந் துயர்க்கடல்மீக் கூர்தலினான் மலைபயந்த தரள மூரற், கணங்குழையாள் புரிபூசை முடிவளவுந் தரியாமல் இடையே கம்பை, அணங்கினைத்தூ தெனவிடுத்து வலிந்திறுகத் தழீஇக்கொள்ள அமையாக் காதல், மணந்தருளிக் குறிபூண்ட ஒருமாவிற் பெருமானை வணக்கம் செய்வாம். காமாட்சியம்மை பிரிந்தமையால் நேர்ந்த துன்பமாகிய கடல் அவ்வளவில் நில்லாது மிகுதலால் அவ்வம்மையார் புரிகின்ற பூசனை முடியுமளவும் பொறாது கம்பை நதி என்னும் தெய்வ மகளைத் தூதாகப் போகவிடக் கண்டஞ்சித் தழீஇக் கொள்ள அடங்காத ஆதரத்தால் கலந்து வளைத்தழும்பும், தனத் தழும்பும் ஒருங்கு பெற்ற மாவடியில் எழுந்தருளியுள்ள திருவேகம்பப் பெருமானை வணங்குவாம். காமாட்சி அம்மையார் ஊன்பிலிற்று மழுவாளி கலவிதனில் ஒண்ணாதென்றோர்ந்து நஞ்சந், தான்பிலிற்றும் பாப்பணியை நீப்பவுங்கார் |