யாவராயினும் ஆக, அவர் விரும்பியது யாதானும் ஆக எண்ணிய எண்ணியாங்கு அருள வல்லது காமதேனு; அது அருள் சுரந்தது பாலியாகலின் ‘தாயைப்போலப் பிள்ளை’ என்றபடி குலவித்தையாயிற்று. ஆகலின், ‘காரணப் பொருளியல்பு காரியத்துளதாகும்’ என்னும் தருக்க நெறி உறுதி உற்றது. மாவுக்கிருக்கும் மணம், கூழுக்கிருக்கும் குணம் என்பதும் நோக்குக. வறுமைஉற் றுழியும் தொண்டை வளமலி நாட்டோர் தங்கள் இறும்உடல் வருத்தியேனும் ஈவதற் கொல்கார் அற்றே தெறுகதிர் கனற்றும் வேனிற் பருவத்தும் சீர்மை குன்றா துறுமணல் அகடு கீண்டும் ஒண்புனல் உதவும் பாலி 33 | வறுமை மிக்க வழியும் வளமலி தொண்டைநாட்டவர் வருந்துதற்குரிய உடம்பை வருத்தியும் பிறர்க்கு ஈதற்குத் தளரார், அத்தன் மைத்தே ஆகப் பாலி நதியும் கோடையினும் மணலை அகழ்ந்தும் தெளிந்த நீரை உதவும். சொற்றஇத் தீர்த்த மேன்மை சுவைபடும் பாலோ டொக்கும் மற்றைய தீர்த்தமெல்லாம் வார்தரு புனலோ டொக்கும் பெற்றிமை உணர்ந்து தொல்லோர் பெயரிடப் பட்ட சீர்த்தி பற்றிய தெனலாம் பாலிப் பெருமையார் பகரு நீரார். 34 | பாலி நதியின் நீர் பாலின் சுவையை உடைத்தாயும் ஏனைய தீர்த்தங்கள் நீரின் சுவையே யாதலையும் கண்டு நம் முன்னோர் இதனைப் பாலியெனப் பெயர் அமைத்தனர் எனலாம் அப் பாலியின் பெருமையைக் கூற வல்லவர் ஒருவருமிலர். நாட்டு வளம் கலிநிலைத் துறை விளம்பும் இத்தகை மணிகொழி விரிதிரைத் தரங்க வளம்பு னறற்றடம் பாலியான் வண்மைபெற் றோங்கி உளம்ப யின்றுநாற் பொருள்களும் உஞற்றுநர்க் கிடமாய்த் துளும்பு மேன்மையிற் பொலிந்தது தொண்டைநன் னாடு. 35 | பாலி நதியின் வளத்தால் அறம், பொருள், இன்பம், வீடென்னும் பயன்களைச் செய்பவர்களுக்கு இடனாய் விளங்கும் மிகுந்த மேன்மையிற் பொலிந்தது தொண்டை நாடு. செக்கர் வார்சடைச் சிவபிரான் திருவருள் செய்யத் தக்க வாய்மையின் உயிர்க்கெலாந் தன்னிடத் திருந்து மைக்கண் எம்பெரு மாட்டியெண் ணான்கறம் வளர்க்குந் தொக்க மாப்புகழ் படைத்தது தொண்டைநன் னாடு. 36 | காமாட்சியம்மையார் முப்பத்திரண்டு அறங்களும் இறைவன் வழி நின்று நடத்துதற் கிடனாய்த் திரண்ட புகழ் கொண்டதும் இந்நாடே. |