கடலில் நடுவிடத்தைக் கிழித்தெழுந்த விடத்தினது தாக்கும் வேகத்தைப்பொறாது பெரிதும் வருந்தினர்; பேரிடர் உற்றனர்; காப்பாற்றத் தக்கவர் இவர்; ஐயோ என்றிரங்கி அருளுதலைப்போலப் பிரகாசிக்கும் பெரிய வெள்ளிமலையினின்றும் இழிகின்ற அருவியின் குளிர்ந்த நீர்த்துளிகள் தங்கள் முகத்தில் வீசவும், மேற்செல்லும் நீண்ட பெரிய கொடிகள் சிவிறியினைப்போல இளைப்புத்தீர அசையவும் ஆய செயல் செய்யும் தன்மையைக் கண்டனர். அச்சமுற வருவிடத்தை யானெடுத்துப் பருகுவலென் றாற்றல் சாலப், பச்சைவரை உயர்கயிலைப் பறம்புவாய் அங்காந்த பரிசே போலச், செச்சைமணி கிடந்திமைக்கும் முழைகள் தொறும் வெண்ணீறு திகழப் பூத்த, பொச்சமிலா முனிவர்குழாம் நிரைநிரையா வீற்றிருக்கும் பொலிவு கண்டார். 24 அச்சம் மிகும்படி வாரா நின்ற விடத்தை நான் எடுத்துப் பருகுவேன் என்று வலிமை நிரம்பிய பசிய மூங்கில்களைக் கொண்ட உயர்ந்த கயிலை மலை வாயைத்திறந்த தன்மை போலச் செம்மணியாகிய மாணிக்கங்கள் கிடந்த ஒளிவிடும் குகைகள் தொறும் வெண்ணீறு விளங்கப் பொலிவு பெற்ற பொய்யிலாத முனிவர் கூட்டம் வரிசை வரிசையாக நிகரின்றியிருக்கும் விளக்கத்தைக் கண்டனர். அங்காத்தல்-வாய் திறத்தல். செச்சை-சிவப்பு. பறம்பு-மலை. முனிவரர் தீங்கின்றியிருத்தலும் காரணமென்க. அழுந்தாழிப் புனலகத்து வடவையும் அக் கடுவெம்மைக் காற்றா தங்கண், எழுந்தோடி முன்னாகத் திருக்கயிலைப் பருப்பதத்தில் எய்தி முன்னா, விழுந்தாறு தன்னில்வரங் கிடப்பதென வயங்கும் ஒளி மேவு செக்கர்ச், செழுந்தாம மணிபடுத்த நெறிநோக்கி அந் நெறிமேற் சேற லுற்றார். 25 ஆழ்ந்த கடல் நீரிடைக் கரந்து நிற்கும் வடவாமுகாக்கினியும் அக் கொடிய விட வெம்மைக்குச் சிறிதும் பொறாது அவ்விடத்தினின்றும் பெயர்ந்தோடித் தமக்கு முன்னமே திருக்கயிலைமலையை அடைந்து திரு முன் வழியில் வரங்கிடப்பதென விளங்கும் ஒளி மிகுந்த செந்நிறம் வாய்ந்த வளவிய மாணிக்கங்களை ஒழுங்காகப் பதித்த வழியைக் கண்டு அவ்வழியே மேற் செல்லலுற்றனர். வடவா முகாக்கினி பெட்டைக் குதிரையின் முகம் போலும் ஓர் அக்கினி, அது கடல் நீரைப் பொங்கி எழாது தடுத்து வைப்பது. வரம் வேண்டுவோர் சந்நிதியில் வீழ்ந்துகிடத்தல் வழக்கு: நிற்றலினும் இருத்தலில் ஒருவர் முயற்சி குன்றும். அதனினும் முனைப்புக் குன்றுவது கிடத்தலில், இறைவன் அருள்வழி நின்று பொறிபுலன் வழிகளின் நில்லாமையை அவன் வழி நிற்றலென்றும்; கிடத்தலென்றும் கூறுவோம். நினைவிற்கு அறிகுறியாகத் திருக்கோயில்களின் வழியில் இன்றும் வீழ்ந்துகிடத்தலைச் சில தலங்களில் காண்கிறோம். அதனைப்பாடு கிடத்தல். வரம் கிடத்தல் என்க. ‘வரங்கிடந் தான் தில்லை யம்பல முன்றிலம் மாயவனே’ (திருக்கோ. 86) என்புழிக் காண்க. |