மணிகண்டேசப் படலம் 203


     இந்திரனார் பட்டதுயர்க் குளம்இரங்கி அவர்ஊரும் எழிலிசேர,
வந்தணுகி எந்தைபிரான் எதிர்நின்று முறையிட்டால் மான முன்னர்,
முந்துகுட முழமுதலாம் பேரியங்கள் பலமுழங்கு முழக்கங் கேட்டு,
சிந்தைநனி களிகூரச் சார்ங்கன் அயன் முதலியோர் திளைத்துச்
சென்றார்.                                            26

     தேவேந்திரன் அடைந்த துன்பத்திற்கு மனம் குழைந்து அவ்விந்திரன்
ஊர்ந்து செல்லும் மேகம் எமது பெருமான் திருமுன் மிக நெருங்கி நின்று
தனது தலைவன் குறையை முறையிடல் ஒப்பச் சந்நிதியில் குட குழா முதலிய
பல வாச்சியங்கள் இடியினது முழக்கம்போல, முழங்க அம்முழக்கத்தைச்
செவிமடுத்து உள்ளம் பெருங்களிகூரச் சார்ங்கம் என்னும் வில்லை ஏந்திய
திருமால் அயன் முதலானோர் களிப்பில் மூழ்கிச் சென்றார்.

     மங்கல முழக்கங்கள் நன்னிமித்தம் ஆவன.

     யாம்எய்தி முறையிடும்போ தருள்தருமோ முனிந்திடுமோ
எம்மான் என்று, நாம்எய்திச் செல்வோர்கள் ஆங்காங்குப் பூதகண
நாதர் கூடித், தோம்எய்திப் பிழைத்தோருஞ் சரணடையின்
அருள்சுரக்கும் எங்கோன் என்று, தாம்எய்தித் தம்மியல்பிற்
புகழெடுத்தோ துவகேட்டுத் தளர்வு தீர்ந்தார்.               27

     நாம் திருமுன்பெய்தி குறைதீர வேண்டுங்கால் நமது பெருமான் அருள்
செய்வரோ, வெகுள்வரோ என ஐயங்கொண்டதனால் அச்சமடைந்து செல்லுந்
திருமால் முதலானோர், பலப்பல இடங்களில் பூதகணநாதர்கள் தம்முட்கூடி
அறிவின்மையால் பிழை செய்தோரும் புகலடையின் அருள் சுரந்து காப்பன்
எம் தலைவன் என்று தம்முடைய அநுபவங்களைத் தம் இச்சையில் இறைவன்
புகழைத் தூக்கிச் சொல்லுவ கேட்டுத் தளர்ச்சி நீங்கினர்.

     திருவருளை நினையாது சென்று துன்பத்தில் சிக்கிக்கொண்டனர்.
ஆதலின், பிழைபொறுக்குமோ, அப்பிழையை அனுபவிக்க வெகுளுமோ என
ஐயுற்றனர். எதிர் பாராத வகையில், தம் ஐயம் தீர்த்தலின், ‘தம் இயல்பில்’
எனக்கூறினர். இவ்வாறே ‘இயல்பால்’ 11-ஆம் செய்யுளிலும் வந்தது. நாம்-
அச்சம். தோம்-குற்றம்.

     தம்மினத்தோர் வரவுதனை முன்னெய்தி அறிவிப்பச்
சார்வோரென்ன, அம்மலைவாழ் எண்ணிலா அரிபிரமர் சேவைசெய்யும்
அமையம் பார்த்துச், கொம்மைமழ விடைப்பெருமான் கோயிலினுட்
சென்றணையக் குறித்து நோக்கி, விம்மிஎழும் பெருமகிழ்ச்சி தலை
சிறப்ப மாலயனும் விரைந்து செல்வார்.                      28

     தம் இனத்தவராகிய திருமால் பிரமன் வருகையை முன்சென்று
அறிவிக்கச் சார்வாரைப் போல அம்மலையிற் சென்று கூடிய அளவிலராகிய
அரிபிரமாக்கள் திருத்தொண்டு செய்யும் சமையத்தைப் பார்த்து