204காஞ்சிப் புராணம்


மிக்க இளமை பொருந்திய விடையை உடைய பெருமானது திருக்கோயிலினுட்
சென்றணைதற்கு எண்ணிப் பார்த்துப் பூரித்தெழும் பெரிய மகிழ்ச்சி தலையாய
உயர்வெய்தத் திருமாலும் பிரமனும் விரைந்து செல்வார்.

     எம்பிரான் உருக்கொண்டங் குறைவோரை அவனெனச்
சென்றெய்தி ஓர்பால், அம்பிகைஇ லாமையினால் அவனல்லர் எனத்
தெளிந்தே அப்பால் ஏகிச், செம்பதுமை வளர்மார்பன் அயன் முதலாம்
யாவர்களுஞ் சேர ஈண்டி, நம்பன் அமர்ந் தினிதுறையும் திருக்கோயிற்
கடைத்தலையை நண்ணினாரால்.                           29

     செந்தாமரையவளாகிய திருத்தங்கு மார்பினனும், பிரமனும், ஏனைய
தேவர்களும் யாவரும் ஒருங்கு சேர்ந்து எம்முடைய தலைவனாகிய
சிவபிரானது திருவுருவாகிய சாரூபம் பெற்றுத் திருக்கயிலையில்
எழுந்தருளுவோரைப் பெருமானென அணுகி இடப்புறத்து உமையம்மையார்
பங்குகொள்ளாத வடிவு நோக்கி அப்பெருமானல்லர் என ஐயந்தீரத் தெளிந்து
அதற்குமேலும் போய் நம்பன் விரும்பி இனிது வீற்றிருக்கும் திருக்கோயிலின்
கடை வாயிலை நண்ணினர்.

     கணங்கள்மிடை முதல்தடையில் தடையுண்டு நின்றனர்கள்
கருமதேவர், உணங்குதயித் தியர்இரண்டிற் கடவுளர்கள் மூன்றில்
ஒரு நான்கு தன்னில், அணங்கறுசாத் தியர்முதலோர் மருத்துக்கள்
முனிவரெலாம் ஐந்தில் ஆறில், நிணங்கமழ்வேல் திசைக்கிறைவர்
எண்மர்களுந் தடையுண்டு நின்றார் அன்றே.                30

     சிவகணங்கள் நெருங்கியுள்ள முதல் வாயிலில் கரும தேவரும்,
இரண்டாந் திருவாயிலில் வாடிய அசுரரும், மூன்றில் தேவரும், நான்கில்
வருத்தந் தவிர் சாத்தியர் முதலோரும் மருத்துக்களும், ஐந்தில் முனிவர்களும்,
பகைவருடைய ஊன்நாற்றம் வீசும் வேலையுடைய எண்டிசைத் தலைவரும்
தடையுண்டு நின்றனர்.

     வேள்வி முதலிய நல்வினை செய்து அவற்றின் பயனாகத் தேவரானோர்
கருமதேவர். பிரமன் படைப்பிலே தேவராகத் தோன்றினோர் கடவுளர்.
சாத்தியர்-தருமன் புதல்வர் பன்னிருவர் எனவும், மருத்துவர் தேவ வைத்தியர்,
அசுவினி தேவர்கள் காற்று வடிவமாய்ச் சஞ்சரிக்கும் நாற்பத்தொன்பதின்மர்
எனவும் கூறுப.

இறைவனை வணங்கல்

     தாமரையோன், திருமாலுந் தடையின்றி அணிந்துதனித் தடையின்
வைகும், தேமருதார் நந்திபிரான் அடிபணிந்தார் அவன் கொண்டு
செலுத்தச் சென்று, காமருசீர் அரம்பையர்கள் ஆடலொடு பாடலறாக்
கடியார் செல்வப், பூமருபே ரவைநாப்பண் அமர்ந்தருளும்
பெருவாழ்வின் பொலிவைக் கண்டார்.                       31