மணிகண்டேசப் படலம் 205


     பிரமனும், திருமாலும் தடையுண்ணாது அணைந்து திரு அணுக்கன்
திருவாயிலில் வைகும் தேன் மருவும் மாலையை அணிந்த நந்தி பெருமான்
திருவடியைப் பணிந்து அப்பிரமன் கொண்டு செல்லச் சென்று உள்புக்கு
விருப்பம் மிக்க அழகு வாய்ந்த அரம்பையர்களின் ஆடலும் அதற்கியையப்
பாடலும் நீங்காத விளக்கம் நிரம்பிய செல்வப் பொலிவமைந்த பேரவைக்கண்
நடுவில் அமர்ந்தருளும் பெருவாழ்வாகும் பெருமான் பொலிவினைக்
கண்டனர்.

     பெருவாழ்வு; ‘செம்பொன் மலைவல்லி தழுவக்குழைந்த மணிமேனிப்
பெருவாழ்வு’ (திருத். திருநா. ) தனித்தடை-பொது வாயிலின் வேறாய சிறப்பு
வாயில். ‘தடை பலபுக்க பின்பு தனித்தடை’ (திருத். மெய்ப்.9,)

     கண்டுபெருங் களிகூர்ந்து கணநாதர் பிரம்படியிற் கலங்கி ஏங்கி,
மண்டியபே ரச்சமுடன் அன்பும்இரு புடைஈர்ப்ப வணங்கித் தாழ்ந்தே,
அண்டன்எதிர் நீளிடைநின் றஞ்சலிசென் னியில்ஏற விழிநீர் வாரக்,
கொண்டமயிர்ப் புளகமுறப் பலமுறையும் பணிந்தெழுந்து குடந்தம்
பட்டார்.                                             32

     தரிசித்துப் பெருங்களிப்பு மிக்குக், கணநாதர் சந்நிதியை மறைப்பவரைப்
பிரம்படியால் ஒதுக்கலின் கலக்க முற்றிரங்கிச் செறிந்த பேரன்பும் பேரச்சமும்
இறைவன் மருங்கிலும், புறத்திலும் இழுப்பத் தாழ்ந்து வணங்கி அண்டங்களை
எல்லாம் உடையனாகிய பெருமான் திருமுன்பு நீண்ட தொலைவில் நின்று
இருகரங்களும் சிரமிசை ஏறவும், விழி நீர் பெருகவும், மயிர் சிலிர்ப்பவும்,
பல முறையும் வணங்கி எழுந்து வளைந்து கரங்குவித்தார்.

     அன்பும் அச்சமும்: ‘அன்பு நீங்கா அச்சமுடன் அடுத்த திருத்தோ
ழமைப்பணியால்’ (திருத். ஏயர்.)

கொச்சகக் கலிப்பா

தூரத்தே இவர்நிற்ப அணித்தாகத் தொழுதணைந்து
வாரத்தால் நந்திபிரான் மலரோனுந் திருமாலுஞ்
சேரத்தாம் வந்ததிறம் விண்ணப்பஞ் செயக்கொன்றை
ஈரத்தா ருடையானும் ஈண்டவரைத் தருகென்றான்.     33

     திருமாலும், பிரமனும் வணங்கித் தூரத்தே நிற்க, நந்தி பிரானார்
அன்பொடும் தொழுதணுகிச் சேர அவர்கள் வந்ததிறத்தினை இறைவன் பால்
வேண்டுகோள் செய்யத் தேனார் ஈரிய கொன்றை மலர் மாலையைத் தரித்த
பெருமானும், அவரை ஈண்டுக் கொணர்க என்றனன்.

     ஈண்டு-விரைந்து, இவண். இருபொருளும் கொள்க.

நந்திபிரான் திருப்பிரம்பை அசைத்தருள நாண்மலர்மேல்
அந்தணனும் நெடியோனும் அஞ்சலிசேர் கரத்தோடும்
வந்தணுகி மருங்குறலும் மணிநிலா நகைமுகிழ்ப்பப்
பைந்தொடியாள் ஒருகூற்றிற் பரம்பொருள்மற் றிதுகூறும்.