அண்டர் மாலயன் உலகெலாம் அதிர்வுறப் பரந்து மண்டு வெஞ்சினக் கடுவலி போய்மலர்க் கரத்தின் ஒண்ட ளிர்ப்பதத் தடியவர் சிந்தைபோல் ஒடுங்கக் கண்ட எம்பிரான் பெருமையார் கட்டுரைத் திடுவார். 45 | திருமால் பிரமன் தேவர் இவர்கள் தம் இருக்கைகளாகிய வைகுந்தம், சத்தியலோகம், அமராவதி ஆகிய இவ்விடங்களில் யாவரும் நடுக்கங் கொள்ளும்படி பரவிச்செறிந்த கொடிய சினங்கொள் விட மேகம் தணிந்து மலரனைய திருக்கரத்தில், விளக்கம் அமைந்த தளிர் போலும் திருவடியின் கீழ் அடியவர் சிந்தை ஒடுங்குவது போல ஒடுங்கும்படி எண்ணி அமைத்த எம்பெருமானது பெருமையை யாவர் உறுதிபெற உரைக்க வல்லார். உலகெலாம் விழுங்கும் பரப்பமைந்த உள்ளத்தைத் திருவடிக்கீழ் அடக்கும் அப்பெருமான் வல்லமையைக் குறிப்பிடும் இவ் அனுபவ அறிவு ஆசிரியர் தம் பெருமையை விளக்கும். தன்ன டித்தொழும் பாற்றும்ஓர் தமிழ்முனி கரத்தில் உன்னு முன்கடற் புனலெலாம் உழுந்தள வாமேல் அன்ன தெண்கடல் தோன்றிய பெருவிடம் அம்மான் பொன்ன லர்க்கரத் தடங்கிய தென்பதோர் புகழோ. 46 | இறைவனுடைய அடித்தொண்டு செய்யும் ஒப்பற்ற தமிழ் முனிவராகிய அகத்தியர் கரத்தில் நினைக்கு முன்னே கடல் நீர் முற்றும் உழுந்தளவாய் வந்து தங்குமேல் அனைய தெளிந்த கடலில்தோன்றிய பெருநஞ்சம் இறைவன் அழகிய மலர் போலும் திருக்கரத்தில் அடங்கியதென்று கூறுவது புகழ்தற்குரியதோ? உழுந்து-உளுந்து. தன்-சிவபிரான். நினைக்குமுன் என்பது விரைவு குறித்து வரும் வாய்பாடு. அம்பு படுமுன் தலை துணிந்தது. மருந்து என்னுமுன் நோய் தீர்ந்தது. ‘தென்னா என்னா முன்னம் தீசேர் மெழு கொப்பாய்’ (திருவா.) இங்கு ‘இருவினைப்பாச’ (திருத். திருநா. ) என்னும் திருப்பாட்டு நினைவில் தோன்றும். கடலில் தோற்றியது ஏகதேசப் பொருள். சேயி தழ்த்தடம் பங்கயக் கரத்திடைச் சிவணுங் காயும் நஞ்சினைக் காண்தொறும் பதைக்கும்வா னவரைப் பாயு மால்விடைப் பண்ணவன் பரிந்தெதிர் நோக்கித் தூய வெண்ணிலாக் குறுநகை முகிழ்த்தனன் சொல்வான். 47 | சிவந்த இதழ்களைக் கொண்டு விரிந்த தாமரை மலரனைய திருக்கரத்தில் பொருந்திய உலகை அழிக்கும் விடத்தைக் காணுந் தொறும் நடுக்குறும் தேவரைப் பாய்ந்து செல்லும் பெரிய விடை ஏறும் பரமன் அருள் கூர்ந்து எதிர்நோக்கி வஞ்சங் கலவாத வெள்ளிய ஒளி பரவிய புன்சிரிப்பு முகிழ்த்துக் கூறுவான். நடுங்குகின்றனர் ஆதலின் திருவிளையாட்டால் மகிழ்விக்கக் குறுநகை முகிழ்த்துக் கூறுவார். |