திருநாட்டுப்படலம் 21


பவம்வி ளைத்திடாப் பெரும்பதி யெனத்திசை போய
சிவம்வி ளைத்திடு நகரங்கள் ஏழுளுஞ் சிறந்து
தவம்வி ளைத்திடு காஞ்சியைத் தன்னிடத் திருத்தி
நவம்வி ளைத்திடும் பெருமைபூண் டதுதொண்டை நாடு.   37

     முத்திதரு நகர் ஏழனுள் முதன்மை பெற்று எண்டிசையும் பரவித்
தவத்திற்கிடனாய்ப் புதுமைகளும் பொலியத் திகழ்வது தண்டகநாடு.

தரைவி ளங்கிய தண்டக நாட்டினில் தகைசால்
வரையுங் கானமும் புறம்பணைப் பழனமு மணிநீர்த்
திரையும் வேலையு மென்னுநா னிலத்தினுள் சிறந்த
புரையில் ஐந்திணை வளஞ்சிறி தறிந்தவா புகல்வாம்.   38

     நிலவுலகம் விளங்குதற்கு ஏதுவாகிய தண்டக நாட்டினில் அழகு
நிரம்பிய குறிஞ்சி, முல்லை, மருத, நெய்தல் எனப் பெறும் மலையும்
மலைசார்ந்த நிலமும், காடும் காடு சார்ந்த நிலமும், வயலும் வயல் சார்ந்த
நிலமும், ஆகிய இவற்றின் குற்றம் இல்லாத ஐவகை ஒழுக்கங்களை அறிந்த
வாறு சிறிது விரும்பிச் சொல்வாம் என ஆசிரியர் அருளினர்.

     ‘தரை விளங்கிய நாடு’ என்பது, ‘நிலம் பூத்த மரம்’ (கலித்தொகை)
நிலம் பொலிவுபெறுதற்கு ஏதுவாகிய மரம் என்பது போல, நிலவுலகம்
விளங்குதற்கு ஏதுவாகிய என எழுவாய்த் தொடராகக் கொள்ளவேண்டும்.
‘ஏதுப்பொருள் கருவிக் கண் அடங்கும்’ என ஆங்காங்கு நச்சினார்க்கினியர்
காட்டுவர். நிலம் நான்காய் ஒழுக்கம் ஐந்தாதல்: பாலைக்குத்தனிநிலம்
இன்றிக்குறிஞ்சியும், முல்லையும் திரிந்ததே பாலை என்பதைக் காட்டும்.

குறிஞ்சி

முருக வேட்கிடு தூமம்ஓம் புறமுளி அகில்சந்
துருவ ஆரழற் பெய்துபுன் பயிர்விளைத் துவப்பார்
பெருவ ளந்துறந் தூர்தொறும் இடுபலி பேணும்
பொருவில் வாழ்க்கையர் தஞ்செயல் போன்மெனப் பொருப்பர். 39

     குறிஞ்சி நிலத்தெய்வமாகிய முருகப் பெருமானுக்கு நறும்புகை வளர்ப்ப,
உலர்ந்த அகில், சந்தனம் முதலிய மரங்களை எரியில் இட்டு, அவ்விடத்தில்
தினை முதலிய புன்செய்ப்பயிரை விளைத்து நுகர்ந்து மகிழ்வர் குறவர்.
இருவகைப் பற்றும் துறத்தலான் பெருவளங்களைக் கைவிட்டுப் பிச்சை
ஏற்றுண்ணும் துறவோரை ஒப்பர் அக்குறவர்.

     அரிய பொருள்களைக் கைவிட்டு எளிய பொருள்கொண்டு வாழ்தலின்
ஒப்பர்.

ஏறு தன்னுடல் வருத்திய பகைமையெண் ணாது
தூறு பன்மணி மரமுதல் பொறையெலாந் தொலைத்த
வேறு நன்றியே கடைப்பிடித் திதைவியன் பொருப்பர்க்
கூறு நல்வளம் விளைத்திடும் உயர்ந்தவர் செயல்போல்.   40