செறியும் நஞ்சினை உண்குமோ சேயிடைச் செல்ல எறிகு மோபுகல் மின்களென் றருள்செய இமையோர் வறிது மூங்கையர் போறலும் ஒருபுடை மணந்த நெறிக ருங்குழல் மலர்முகம் நோக்கினன் நிகழ்த்தும். 48 | ‘வேகம் செறியும் விடத்தை யாம் உண்பேமோ? நெடுந் தொலைவில் அகல எறிவேமோ? கூறுமின்க’ளென்று வினவத்தேவர்கள் வாளா ஊமையரை ஒத்தலும் ஒரு மருங்கு கூடிய நெறித்த கரிய கூந்தலையுடைய அம்மையின் மலர்போலும் முகத்தை நோக்கினனாய்க் கூறுவான். இறைவன் திருவிளையாட்டான் வினாவத் தேவர் தாம் செய்த பிழையின் விளைவை இறைவனை ஏன்று கொள்க என்னும் மனத்துணிவு இன்மையானும், எறிந்தால் தம் உயிர்க்கு இறுதி உண்டாம் என்னும் அச்சத்தானும் வாளா இருந்தனர். அரிவை கேட்டிஇக் கொடுவிடம் அகிலமும் ஒருங்கே எரிம டுத்ததுன் பார்வையால் இன்னமு தாமால் புரிவ தொன்றிலை பருகினாற் புகறிநீ என்ன வரிவி ழிக்கடை தோய்மணிக் கணங்குழை மடமான். 49 | அரிவையே, கேட்பாய், இக்கொடிய விடம் எல்லா உலகங்களையும் ஒருசேரத் தீவாய்ப் பெய்தது. உனது அருட் பார்வையால் அது இனிய அமுதமாம். இதனைப் பருகின் இது செய்வதொன்றில்லை. செவ்வரி பரவிய கண்ணின் கடை சென்று தோய்கின்ற மணிகள் பதித்துத் திரண்ட காதணியை யுடைய இளமானனைய அம்மையார். உலகெ லாந்தரும் அன்னைஅவ் வுலகின்மேல் வைத்த அலகி லாப்பெருங் கருணையாற் கொழுநன்மாட் டமைந்த தலைமை அன்பினான் மலர்முகம் ஒருபுடை சாய்த்துக் குலவு செங்கையின் விடத்தினை நோக்கினள் குறித்து. 50 | எல்லா உயிர்களையும் ஈன்றருளிய அன்னையாகிய உமையம்மை யார் அவ்வுயிர்கள் மேல் வைத்த அளவுட்படாத பெருங் கருணையாலும், நாயகனிடத்து வைத்த தலை சிறந்த அன்பினாலும் தாமரை மலர்போன்ற முகத்தை ஒரு புடை கோட்டி விளங்குகின்ற திருக்கையின் விடத்தினைக் கருதி நோக்கினள். உயிர்கள் மேல் வைத்த கருணையால் எறியவும், கணவனாரிடத்துள்ள பேரன்பால் நுகரவும் இசையாது நோக்கினர். நோக்கால் விடவேகம் தணித்தல்: ‘‘ஆலம் உண்டமுதம் பொழிதரு நெடுங்கண் அம்பிகை’’ (வில்லி. அருச். ) இறைவனை விடம் தன் வயப்படுத் தாமை அம்மை அறிந்து வைத்தும், நோக்கியது அன்பின் செயல். மாழை உண்கணி நோக்கலும் திருவுளம் மகிழ்ந்து பாழி மால்விடை கொடிமிசை உயர்த்தருள் பகவன் ஏழை வானவர்க் கிரங்கியே இனிதுகண் ணோடி ஆழி வல்விடம் பருகினான் அகிலமும் உய்ய. 51 | |