மாவடுவை ஒத்த மையுண் கண்ணியாகிய உமையம்மையார் நோக்கிய அளவிலே திருவுள்ளம் மகிழ்ச்சி உற்று வலிமையும் பெருமையும் அமைந்த விடை எழுதிய கொடியை மேல் உயர்த்தருள் பகவன் (அபலை) ஏழையராகிய தேவர்க்கு இரங்கியே இனிது கண்ணோட்டம் வைத்து உலகம் உய்யும்படி கடலில் தோன்றிய கொடிய விடத்தைப் பருகினான். பருகு வெங்கடு மிடற்றிடை ஏகுழிப் பாரா மரும லர்ப்பிராமன் முகுந்தனே வஞ்சநஞ் செம்மான் திருமி டற்றினுக் கழகுசெய் தமரர்சே யிழையார் அருமி டற்றுநூல் காத்தது காண்கென அறைந்தான். 52 | பருகும் கொடிய விடம் கண்டத்திடைச் செல்லும்போது பிரமன் பார்த்துத் திருமாலே! வஞ்சவிடம் எம்பிரான் திருக்கழுத்தினுக் கழகு செய்து தேவ மகளிர் திருக்கழுத்தில் விளங்கும் அரிய தாலி நூலைக் காத்ததனைக் காண்கெனக் கூறினான். அமுதம் நோக்குகையில் மாறாக எழுந்தமையின் வஞ்ச நஞ்சாயிற்று. மிடற்றுச் செக்கர்வான் மிசைவிடக் கருமுகி லுறநோய் கெடத்த ளிர்த்தபைங் கூழெனச் சுராசுரர் கெழுமிக் கடற்பெ ரும்புனல் உடைத்தெனக் காதல்மீக் கூர அடற்க ணிச்சியோய் சயசய போற்றிஎன் றார்த்தார். 53 | திருக்கழுத்தாகிய செவ்வானில் விடமாகிய கரியமேகம் எழுதலால் நோய் கெடும்படி தழைத்த பசியபயிர் எனச் சுரரும் அசுரரும் குழுமிக் கடலிடத்துள்ள பெருவெள்ளம் கரைபுரண்டா லென்னப் பெருவிருப்பம் மேன்மேலெழ வன்மை அமைந்த மழுப்படையோனே வெல்க! வெல்க!! வணக்கம் என்று ஆரவாரித்தார். நார ணாதியர் கிளர்ச்சியை நோக்கிநன் கருளிக் கோர வல்விடம் மிடற்றிடை அமைத்தனன் குழகன் ஆர வாயிடை வயிற்றிடை யன்றிமற் றிடைக்கண் ஆர மைத்திட வல்லவர் அமிழ்தமே யானும். 54 | என்றும் இளையன் ஆய சிவபிரான் திருமாலாதி தேவர் பரபரப்பினை நோக்கி நன்றருள் செய்து கொடிய வலிய விடத்தைக் கண்டத்தில் பொருந்த வைத்தனன். வாயில் அல்லது வயிற்றிடைப் பொருந்த வைத்தலன்றி இவ்விரண்டன் இடையாகிய கண்டத்தில் அமிழ்தமே எனினும் யாவர் அமைத்திட வல்லவர். குழகன்: ‘‘மூப்பது மில்லை பிறப்பதும் இல்லை இறப்பதில்லை’’ (சுந்தரர்: மூப்பதுமில்.1.) ஆகலின் குழகன் என்க. யாவரும் வெரூஉம் நஞ்சைக் கண்டத் தடக்கி எல்லாம் வல்லவன் என்பதை நிலைநாட்டினன். |