சார்ந்தாசயப் படலம் 219


      நாணற்புல்லின் தொடர்பால் முருகன் சரவணபவன் ஆயினன்.
அங்ஙனே இலந்தைக் காட்டின் தொடர்பால் வியாசன் வாதராயணன்
ஆயினன். மாற்றம்-மாறுபாட்டுரை என்னும் பொருள் தருதலும் நயம்
ஆம். கொண்டது விடாமை பற்றி மூர்க்கன் எனப்பட்டனன்.

விச்சு வேசன்முன் நின்றிரு கரமிசை நிமிர்த்தாங்
கச்ச மின்றிமுன் புகன்றதே புகன்றனன் அந்தோ
விச்சை நூல்பல கற்பினுஞ் சிவன்அருள் விரவாக்
கொச்சை யோர்தமை விடுவதோ கொடுமலச் செருக்கு.    11

     காசியில் எழுந்தருளியுள்ள விசுவநாதர் திருமுன் நின்று இரு
கரங்களையும் மேலெடுத்து நிமிர்த்து அச்சமின்றி முன்கூறிய அதனையே
மேலும் கூறினன்; அந்தோ! அறிவு நூல் பலவற்றைக் கற்றாலும் திருவருளைப்
பெறாத இழிந்தவர் தம்மைக் கொடிய ஆணவமலத்தான் ஆகிய இறுமாப்பு
விட்டு நீங்குமோ? நீங்காது என்றபடி,

     தெய்வத்தின் முன் கூறும் சூளினை ‘முன் தேற்று’ எனவும், ‘கடுஞ்சூள்’
எனவும் இலக்கண இலக்கியங்கள்  கூறும். அந்தோ, இரக்கம்.

அறிவு போல்அடர்ந் தெழும்அறி யாமையின் வலியால்
பொறிஇ லான்இது கிளப்பவும் வெகுண்டிலன் புனிதன்
மறுவில் கூற்றெலாந் தன்பெயர் எனுமறை வழக்கால்
வெறிம லர்க்குழல் உமையொடு மகிழ்ந்துவீற் றிருந்தான்.  12

     அறிவு போல மீதூர்ந்தெழும் அஞ்ஞானத்தின் மிண்டினாலே
அறிவிலியாகிய வியாதமுனி இதனைக் கூறவும் சிவபிரான் குற்றமில்லாத
திருப்பெயர்கள் யாவும் தனக்குரியனவே என்று வேதங்கள் கூறுமுறைமையால்
முனிந்திலனாய் மணம்வீசுகின்ற மலரையணிந்த கூந்தலை யுடைய
உமையம்மையோடும் மகிழ் கூர்ந்து வீற்றிருந்தனன்.

     அறியாமை, தன்னையுடையவனை அறிவு போலத் தோற்றி வஞ்சிப்பது.
அறியாமையை அறியாமை என்றே உணர்வது அறிவுடைமை; அது எங்ஙனம்
அறியாமையில் தோற்றும். ‘கல்லா தவரும் நனிநல்லர் கற்றார் முன் சொல்லா
திருக்கப் பெறின்’ (திருக். 403) விசேட வுரையை நோக்குக.

நந்தி யெம்பிரான் வெகுண்டுநாண் மலர்க்கரம் எடுத்த
அந்த வண்ணமே அசைவற நிற்குமா சபிப்ப
மந்த னாயினான் நிமிர்த்தகை மடக்கவல் லாமை
நிந்தை யாற்சிலைத் தூணமொத் தசைவற நின்றான்.   13

     திருநந்தி தேவராகிய எம்பெருமானார் உள்ளம் கொதித்துத் தூக்கிய
கையை அப்படியே அசையாதபடி நிற்குமாறு சாபம் கொடுக்கக் கூரிய
அறிவிலனாகிய வியாதன் நிமிர்த்தகையைமடக்க இயலாமையினால்
சிவநிந்தனையினாற் கற்றூணை ஒத்துச் சிறிதும் அசைவற நின்றனன்.