சார்ந்தாசயப் படலம் 221


யாமெ லாம்அவன் இணையடித் தியானஞ்செய் பசுக்க
ளாமெ னத்தெளி அவனருள் சேர்தலிற் பசுவும்
பூமி சைத்தியா னப்பொரு ளாமெனப் புனைந்து
தோம றச்சில நூல்புகல் உண்மையுந் துணியாய்.     17

     ‘‘யாங்கள் யாவரும் அவனுடைய இரு திருவடிகளையும் மனத்திருத்தி
வழிபடும் பசுக்களாவேம் என உறுதியாக அறிந்துகொள். அவனுடைய
திருவருள் எங்களிடத்தில் தங்குதலின் பசுக்களாகிய எங்களையும் நிலவுலகில்
தியானஞ் செய்யப்படும் பொருளாமென்று புனைந்துரையாகக் குற்றமறச் சில
நூல் கூறும் உண்மையையும் நீ துணியாய்.’’

அறிஞர் கொண்டகோட் பாடிது அறிந்திலை அம்மா
பிறிவில் ஆணவச் செருக்கினின் மயங்கிய பேதாய்
வெறிய நீஇனி உய்வது வேட்டனை யாயின்
குறிபி றழ்ந்திடா தென்னுரை மெய்யுறக் கோடி.     18

     ‘‘வேறற நின்ற ஆணவ மலச்செருக்கால் அறிவுமயங்கிய பேதையே! 
மெய்யறிவுடையோர் கொண்ட கொள்கை இது. இதனை யறியாதொழிந்தனை;
பித்தேறிய நீ இனி பிழைத்தலை விரும்பினை ஆனால் குறிக்கோளினின்றும்
வழுவாது யான்கூறும் நல்லுரையைச் சத்தியமாகக் கைக்கொள்வாய்.’’

மந்தி ரத்தழல் மகத்தினுக் கிறையவன் மகவான்
சந்த மாமறைக் கிறையவன் தாமரைக் கிழவன்
இந்தி ராதியாம் உலகினுக் கிறையவன் யானே
மைந்த னேயெனக் கிறையவன் மணிமிடற் றிறையோன்.  19

     மகனே மந்திரம் ஓதி வளர்க்கப்படும் தீவினையுடைய வேள்விக்குத்
தலைவன் இந்திரனே. யாப்பமைந்த சிறப்புடைய வேதத்திற்குத் தலைவன்
பிரமனே. யானே இந்திரன் முதலானோர் வாழ்கின்ற உலகங்களுக்கு நாயகன்
ஆவேன். நீலகண்டம் உடைய சிவபிரான் எனக்கு இறையவன்.

அகில நாயகன் அவற்குமேல் இறையவன் இல்லை
அகில லோகமும் அவன்திரு ஆணையின் நடக்கும்
அகில லோகமும் படைத்தளித் தழிப்பவன் அவனே
அகில நூல்களும் உரைத்திடுந் துணிவிது வாமால்.    20

     எல்லாப் பொருள்களுக்குந் தலைவனாகிய அச் சிவபெருமானுக்கு
மேற்பட்ட தலைவன் ஒருவனுமில்லை. எல்லா உலகங்களையும் படைத்துக்
காத்தழிப்பவன் அவ்விறைவனே என்று வேத முதலிய எல்லா நூல்களும்
எடுத்துக் கூறும் முடிந்த பொருள் இதுவேயாம்.’’