222காஞ்சிப் புராணம்


வானம் ஏத்தயான் வைகுந்த வாழ்வுபெற் றதுவும்
ஞான நான்முகன் சத்திய உலகம்நண் ணியதும்
ஏனை விண்ணவர் தத்தம வாழ்க்கைஎய் தியதும்
ஆனு யர்த்தவன் அருட்குறி அருச்சனைப் பயனால்   21

     ‘‘வானோர் துதி செய்ய யான் வைகுந்த ஆட்சி பெற்றதும், அறிவுடைய
பிரமன் சத்தியலோக வாழ்க்கையை எய்தியதும், ஒழிந்த விண்ணுலகோர்
தத்தமக்குரிய வாழ்க்கையை அடைந்ததும், இடப ஊர்தியை யுடையவன்
சிவலிங்க வழிபாட்டின் பயனாவன.’’

     அருச்சனைப்பயன்: இரணியேசப்படலம் 6,7 செய்யுளைக் காண்க.

விண்டு வியாச முனிவரை வெகுளுதல்

அன்ன வன்திரு வடிகளே சரணம்என் றடைமோ
இன்ன தாயநின் மயக்கினை விடுமதி இன்றேல்
பின்னல் வேணிநீ கெட்டனை பிறரையுங் கெடுக்க
உன்னு கின்றனை எனவெகுண் டுரைத்தனன் திருமால்.  22

     ‘‘அப்பெருமான் திருவடிகளையே அடைக்கலம் என்று அடைதி;
இங்ஙனம் ஆய தடுமாற்றத்தை விடுதி; இல்லையாயின், பின்னிக்
கிடக்கின்ற சடையுடையோனே, நீ கெட்டொழிந்தனை; பிறரையும்
கெடுக்க நினைக்கின்றனை’’ எனத் திருமால் கோபத்தொடும் கூறினன்.

     மோ, மதி முன்னிலை அசைகள்.

வாயு றுத்திய கடுமொழி கேட்டனன் மற்றைத்
தூய வானவத் தொகையெலாந் துரும்பெனக் கழித்தான்
பாயு மால்விடைப் பகவனே பரமெனத் தெளிந்தான்
ஏயு மாறருள் கிடைத்துயர் இருந்தவத் தலைவன்.    23

     உண்மையை உள்ளடக்கிய கடுப்போன்ற மொழியைக் கேட்டனர்.
ஏனைய கடவுளர் குழாத்தை முற்றும் துரும்பு போல மதித்துக் கழித்தனர்.
பாய்கின்ற பெரிய விடையையூர்கின்ற பகவனே முதற்பொருள் எனத்
தெளிந்தனர். பொருந்துமாறு அருள் வாய்த்து உயர்ந்த பெரிய
தவத்தலைவராகிய வியாசர்.

மெய்த்த வத்தவர் தமையெதிர் நோக்கிமே தகையீர்
இத்த கைத்தமால் உமக்கும்என் போலஎய் தியதோ
சுத்த மாமறை முழுவதுந் துகளறத் தெரிந்த
சித்தர் காள்எனை வினவிய தென்கொலோ செப்பீர்.  24

     உண்மைத் தவமுடையவர்களை நேர் ‘‘நோக்கி மேன்மை
அமைந்தவர்களே! இவ்வியல்பினையுடைய மயக்கம் உங்கட்கும் என்னைப்
பற்றியது போலப் பற்றியதோ!  தூய பெருமறை முழுவதும் குற்றமற
ஆராய்ந்த சித்தத்தை யுடையவர்களே! அறிந்து வைத்தும் என்னை
வினவியது யாது காரணம் கூறுமின்.’’