சார்ந்தாசயப் படலம் 223


விச்சு வன்சிறைப் புள்ளர சுயர்த்தவன் விளம்பும்
விச்சு வாதிகன் எறுழ்வலிச் சினவிடை ஊர்தி
எச்ச மேசுரும் புளர்துழாய் அலங்கலான் என்ப
எச்ச நாயகன் பொலந்துணர் இதழிமா லிகையான்.   25

     ‘‘கருடக்கொடி உயர்த்த திருமால் உலகமாயிருப்பவன்; பேசப் பெறும்
உலகிற்கு அப்பாற்பட்டோன் வலிமைமிக்க காய்கின்ற விடையை ஊர்தியாக
உடைய சிவபிரான். யாக வடிவினன் வண்டுகள் ஒலிக்கின்ற துளவ மாலையை
யணிந்த திருமால் என்று கூறுவர். வேள்வி நாயகன் பொன்மயமான
கொத்துக்களையுடைய கொன்றைமலர் மாலையையணிந்த சிவபெருமான்.’’

     ‘‘வேள்விநீ வரதராச உயர் வேள்வி இறை நாம் என முன்னும்
வந்தது (சிவாத்.26.)

மாயை யாம்கொடு முரன்றனைச் செகுத்துயர் வயவன்
மாயை யாள்பவன் முப்புரம் கனற்றிய வள்ளல்
சாயல் மாமயில் வனிதையே நாரணன் தரியார்
சாய வென்றசீர்ப் புருடனாம் கண்ணுதல் தலைவன்.  26

     ‘‘கொடிய முராசுரனை அழித்துயர்ந்த வலியோனாகிய திருமால் மாயை
ஆகும். திரிபுரத்தைச் சிரித்தெரித்த வள்ளலாகிய சிவபிரான் மாயையைச்
செலுத்துவோன். நாரணன் பெருமையுடைய மயில்போலுஞ் சாயலையுடைய
பெண் ஆவன். நெற்றிக் கண்ணுடைய பகைவரை அழிய வென்ற சிவபிரான்
சிறப்புடைய புருடன் ஆவன்.’’

என்ன மாமறை மிருதிநூல் புராணம்மற் றெவையும்
பன்னு கின்றதில் ஐயுறற் பாலதொன் றுளதோ
புன்ம ருட்சியில் மயங்கினேன் புலங்கொளத் தெருட்டா
தென்னை இவ்வணங் கண்டனிர் இதுநுமக் கழகோ.   27

     ‘என்று பெருமறையும், தரும நூலும், பதினெண்புராணங்களும், பிறவும்
கூறுமவற்றுள் ஐயம் எழற்பாலது சிறிதும் உண்டோ? இல்லை. புல்லிய
மயக்கத்தில் மயங்கின என்னை அறிவு பெறத் தெருட்டாமல் என்னை
இவ்வாறாக்கினீர். இவ்வியல்பு நுங்கட்குத் தகுவதொன்றோ?’’

     இது நுமக்கு நன்றன்று என்றபடி. திருமுன் பொய்ச்சூளுரைத்துப்
பழியும், பாவமும் எய்திக் கை நின்றமையைக் கருத்திற் கொண்டு ‘இவ்வணம்
கண்டனிர்’ என்றனர்.

சிவனை யாவரே அருச்சனை செயாதவர் சிவன்மற்
றெவரை யாயினும் அருச்சனை இயற்றிய துண்டோ
கவர் மனத்தினை ஒழித்தினி யாமெலாங் கவலா
தவன் மலர்த்துணைச் சரணமே அடைதும்என் றியம்பி.  28