|      அந்தகாசுரனையும், விடுவச் சேனையும் சூலமிசைக் கோத்த    எந்தையே! நின்னுடைய பேரருட்டிறத்தை யான் என்னறிந்தேத்துகேன்!
 உள்ளத்தழுக்கில்லாத அடிமையேன் செய்த பிழையைப் பொறுத்தே
 செலுத்துகின்ற மாபெருங் கருணையால் உய்யும்வழியை அருள்செய்வாய்.
      இரணியாட்சன், சோமுகன், இரணியன் ஆகிய இவர்களை அழிக்கவும்    பாற்கடலில் மந்தரமலையைத் தாங்கவும், திருமால் முறையே கொண்டவராக,
 மச்ச, நரசிங்க, கூர்மாவதாரங்களின் முடிவில் செருக்குற்று உலகிற்குத்
 தீங்கிழைத்த வழி அவைகளின் செருக்கைப் போக்குதற்கு முறையே முருகர்,
 ஐயனார், வீரபத்திரர், விநாயகர்களால் அவற்றை அழிப்பித்தமை கருதி
 ஒவ்வோர் கூற்றால் (அம்சம்) என்றனர். அமைச்சரை அணுக்கராதல் பற்றி
 அரசரென்றாற் போல விடுவச் சேனனை மாயன் என்றார், வயிரவேசப்படலம்
 29-ஆம் செய்யுளிற் சூலமிசைக் கிடந்தமை காண்க.
 		| என்று கண்கள்நீர் சொரியநாத் தழும்பநின் றேத்தி ஒன்று காதலான் நெக்குநெக் குருகிஆன் பிரிந்த
 கன்று போல்பதைத் தலந்திரந் தயரும்அக் காலைக்
 கொன்றை வார்சடைக் குழகனும் கருணைகூர்ந் தருளி.   33
 |       என்று கூறிக் கண்கள் நீரை மழைபோலப் பொழியவும், நாத்தழும்    பேறவும் நின்று துதித்து ஒருமுகப்படுத்திய அன்பினால் நெகிழ்ந்து நெகிழ்ந்து
 தாயைப் பிரிந்த பசுக்கன்று போல நடுக்கமுற்று மனஞ்சுழன்று வேண்டி
 வருந்தும் அப்பொழுது கொன்றைமலர்மாலையைத் தரித்த நீண்ட சடையினை
 யுடைய குழகனும் கருணை மீக்கூர்ந்தருளி.
      அன்புக்கு ஆவும் கன்றும் உவமை: பக்த வத்ஸலன் என்னும் பெயர்    காண்க.
 இறைவன் திருவாய் மலர்ந்தருளல்	 		| வெள்ளி யங்கிரி எழுந்தென விளங்கொளி விடைமேல் வள்ளை வார்குழை உமையொடு மகிழ்ந்தினி தேறிப்
 பிள்ளை வாரணக் கடவுளும் பிறங்கெரி வடிவேல்
 அள்ளி லைப்படை ஏந்தலும் இருபுடை அணுக.    34
 |       வெள்ளிமலை கால் கொடு நடந்தாற் போல வெள்ளொளி     விளங்குகின்ற இடப ஊர்தி மேல், காதில் அழகிய நீண்ட காதணி பூண்ட
 உமையம்மையொடும் மகிழ்ந்தினி தேறி விநாயகப்பெருமானும், விளங்குகின்ற
 சுடர் வடிவேலாகிய கூரிய இலைபோலும் வடிவமைந்த ஆயுதம் தரித்த
 முருகப் பெருமானும் முறையே வலமும் இடமும் நெருங்கவும்,
 		| பிறங்கு சக்கர பாணியும் பிரமனும் இருபால் அறங்கு லாந்திரு வடியிணை தாங்கினர் நடப்ப
 மறங்கு லாம்படைக் கடவுளர் வான்மிசை மிடைந்து
 கறங்கு வண்டுறாக் கற்பக மலர்மழை பொழிய.     35
 |  |