திருநாட்டுப்படலம் 23


நெருங்கு பைந்தழை வருக்கைமேல் நெடுவளி யலைப்ப
அருங்கண் மாமயில் வீற்றிருந் தசைதருங் காட்சி
கருங்க ணாயிரச் செம்மல்தன் மருகனைக் காண
மருங்கு வந்துதன் ஊர்தியை நிறுவுதல் மானும்.     44

     பலாமரத்தின்மேல் மயிலிருந்து பெருங் காற்றலைப்ப அலையுங் காட்சி,
ஆயிரங் கண்களையுடைய இந்திரன் தன்மருகனாகிய முருகனைக் காண வந்து
ஊர்தியாகிய மேகத்தை நிறுத்துதல் ஒக்கும்.

சந்தும் ஆரமுந் தாங்கிவம் பலர்ந்ததண் குவட்டான்
மைந்தர் கண்ணையு மனத்தையும் கவர்ந்திடும் வனப்பின்
முந்தும் ஓங்கலுங் கொடிச்சியர் குழுக்களு முகில்தோய்
கந்த மார்குழை முகத்தலர் இலவங்கங் காட்டும்.      45

     சந்தன மரங்களையும், முத்துக்களையும் தாங்கி, வாசனை பொருந்திய
குளிர்ந்த கொடுமுடியான் மைந்தர் கண்ணையும், கருத்தையும் கவர்ந்து
கொள்ளும் பேரழகால் மலையும் நறுமணம் கமழ் தளிர் முன்னுடைய
இலவங்கமரம் காட்டும்.

     (வேறு பொருள்) சந்தனமும், முத்து மாலையும் தாங்கிக் கச்சணிந்த
குளிர்ந்த கொங்கையால் கவர்ந்திடு உறுப்பெலாம் திரண்ட பேரழகால்
குறிஞ்சி  நிலமகளிர் குழாமும், கம்மியர் செய்குழை தங்கு முகத்து இலவிதழ்
(அங்கம்) வாய்காட்டும், சிலேடையணி.

     மலைகண்ணைக் கவர்தல்: கண் வாங்கிருஞ் சிலம்பு (கலித்- )

கொங்கை யேந்திய ஆண்களும் அவணகொம் புடைய
துங்க வேங்கையின் குலமெலாம் அவணபால் சுரந்து
பொங்கு நீடுசே வினங்களும் அவணவான் புனலை
அங்ஙண் வேட்டுணும் ஒற்றைத்தாள் எகினமும் அவண.
  46

     நறுமணம் தாங்கிய ஆண் மரங்களும், கோடுகளையுடைய உயர்ந்த
வேங்கை மரங்களும், பால் பெருகி மிகு சே மரங்களும், நீரை விரும்பி,
உண்ணும் ஒரு தாளையுடைய புளிய மரங்களும் அவ்விடத்தன, (வியப்பு)
முலையுடைய ஆணும், கொம்புடைய புலியும், பால் சுரக்கும் காளையும்,
ஒரு காலையுடைய அன்னமும் அவ்விடத்தன என்னும் பொருள் காண்க.

ஆணெ லாம்ஒரு கன்னியை மணப்பவா னணையுங்
கோணை வேங்கைகள் யாட்டினோ டுறவுகொண் டோங்கும்
பேணு சேவினஞ் சிங்கமே லேறிடும் பிழையா
தேணி னாற்பொலி எகினங்கள் இடபத்தை விழுங்கும்.   47

     ஆண் மரங்கள் கன்னி ராசியைத் தோய வானை அணையும்;
அழிவின்மையையுடைய வேங்கை மரங்கள் மேடராசி யொடு நட்புறும்;
சேமரங்கள் சிம்மராசி மேல் இவரும், தப்பாது வன்மையாற் பொலி புளிய
மரங்கள் இடப ராசியைப் போர்க்கும்.