| நாயனார் திருவாக்கால் அறிக. ‘‘பசித்துண்டு பின்னும் பசிப்பானை ஒக்கும்.     இசைத்து வருவினையில் இன்பம்-இசைத்த, இருவினை ஒப்பில் இறப்பில்
 தவத்தான், மருவுவனாம் ஞானத்தை வந்து’’ (சிவஞா. சூ.8 அதி.1)
 		| சிவலிங்கப் பதிட்டை செய்தல் எவற்றுளும் சிறந்த தாகும் சிவபத்தர் பதிட்டை தானும் அன்னதே இவைதாம் செல்வச்
 சிவன்அமர் தலங்கள் தம்மிற் செய்பயன் கோடிமேலாம்
 சிவநிறை காஞ்சி வைப்பிற் செய்திடின் அனந்த கோடி.  	8
 |       சிவலிங்கம் தாபித்து அருச்சித்தல் ஏனைய சிவ புண்ணியங்களுள்ளும்    மிக்கதாகும். சிவனடியவர் வழிபாட்டுப்பயனும் அதுவேயாகும். இத்தொண்டுகள்
 செல்வனாகிய சிவபிரான் விரும்பி வீற்றிருக்கும் சிவதலங்களில் செய்யப்
 பெறுமேல் பயன் மிக்குளவாகும். நலம் நிறைந்த காஞ்சிநகர்க்கண் செய்யப்
 பெறின் அளவில் கோடியாய்ப் பல்கும்.
      ‘தாபர சங்கமங்கள் என்றிரண் டுருவில் நின்று, மாபரன் பூசை கொண்டு     மன்னுயிர்க் கருளை வைப்பன்’ ஆகலின் அடியவர் வழி பாடும் ஆண்டவன்
 வழிபாடும் ஒக்கும் என்க. காலத்தானும், இடத்தானும் பயன்கள் மிகும் என்க.
 		| காஞ்சியை நினைப்பிற் காசிக் கடிநகர் வசித்த பேறாம் காஞ்சியே எவற்றி னுள்ளுஞ் சிறந்தது காண்மின் என்னுங்
 காஞ்சிசூழ் அல்குல் வாணி கணவனார் மொழியுட் கொண்டு
 காஞ்சியை அடைந்தார் மாசு கடிந்துயர் எழுவர் தாமும்.   9
 |       ‘‘காஞ்சியை நினைப்பினும் விளக்கம் பொருந்திய காசியில் வசித்தலான்    வரும் புண்ணியம் வாய்க்கும். காஞ்சியே தலங்கள் எவற்றினும் மிக்கது
 ஆகும் என்றறிமின்’’ என்று கூறும் மேகலை யணிந்த சரசுவதி நாயகன்
 மொழியை மனத்துட்கொண்டு மனக்குற்றம் அகன்று உயர்ந்த முனிவரர்
 எழுவரும் திருக்காஞ்சியை அடைந்தனர்.
 		| அருட்சிவ கங்கை நன்னீ ராடிஏ கம்ப வாணர் திருப்பதந் தொழுது மஞ்சட் செழுநதிக் கரையின் எய்தி
 அருத்திகூர் வியாத நாதன் அணிமையில் தத்தம் பேரான்
 இருத்தினர் இலிங்கம் பூசைஇயற்றினர் ஆர்வத்தோடும்.   10
 |       அருள் வடிவாகிய சிவகங்கைத் தீர்த்தத்தில் மூழ்கித் திருவேகம்பப்    பெருமான் திருவடிகளைத் தொழுது மஞ்சள்நீர் நதிக்கரையினை அடைந்து
 பேரன்பு மிக்க வியாச முனிவரர்க்கு அருள் செய்த வியாச நாதேசுவரர்க்கு
 அருகில் தங்கள் தங்கள் பெயரால் இலிங்கம் தாபித்துப் பேராதரத்துடன்
 பூசனை இயற்றினர்.
 		| பச்சிலை பழம்போ தேனும் பறித்திட்டுப் பத்தி செய்வோர்க் கெச்சமில் இருமைப் பேறும் அளித்தருள் இறைவா போற்றி
 முச்சக முதலே போற்றி முலைச்சுவட் டணியாய் போற்றி
 நச்சினார்க் கினியாய் போற்றி எனத்துதி நவிலுங் காலை.  	11
 |  |