பழுக்கச் சுட்டபொற் பிழம்பெடுத் தப்பிய பரிசுறழ் திருமேனிக் கழுக்க டைப்படை ஏந்துமுத் தீசன்ஒண் கழலடி தொழும்பேற்றால் இழுக்கித் தங்கிளை முருக்குறுங்கலுழன தெறுழ்வலித் திறம்நோக்கி வழுக்கில் வெம்பணிக் குலங்களும் பிரானடி வழிபட நினைவுற்று. 2 | சிவக்கக் காய்ச்சிய பொற்குழம்பைப் பதித்த தன்மையை ஒத்த திருமேனியையும், சூலப்படையையும் உடைய முத்தீசப் பெருமான் விளக்க மமைந்த வீரக்கழலணிந்த திருவடியைத் தொழும் புண்ணியத்தால் தம் இனத்தைத் தாழ்வுறுத்தி அழிக்கின்ற கருடனது மிக்க வலிமையை நோக்கித் தவறில்லாத கொடிய பாம்பினமும் பெருமானது பாத மலர்களை வழிபட எண்ணி, தழங்கு தீங்கிணை முழக்கறாத் தடநெடுங்கச்சிமா நகர்சார்ந்து, முழங்கு வெண்டிரை சுழித்துவான் நிமிர்ந்துநான் முகன்மகந் தபச் சீறி, வழங்கு நன்னதி வடக்கண் ஆதீபித வளநகர்த்தென் பாங்கர்ப் பழங்கண் நோயறப் பணாதரேச் சரன்றனைப் பத்தியில் தாபித்து. 3 ஒலிக்கின்ற இனிய ‘கிணை’ என்னும் மருதநிலப்பறையின் ஒலி மாறாத நீண்டும் அகன்றும் விளங்கும் காஞ்சிமா நகரைச் சார்ந்து, முழங்குகின்ற வெள்ளிய திரைகளுடன் சுழியிட்டு வானளவும் நிமிர்ந்து பிரமனுடைய வேள்வி கெடச் சீறி நடக்கின்ற வேகவதி நதிக்கு வடக்கில் ‘ஆதீபிதம்’ என்னும் தெய்வத்தலத்திற்குத் தென் திசையில் துன்ப நோய் தீரப் பணாதரேசப்பரனைப் பேரன்பினால் இருத்தி, விதிமுறைச்சிவ பூசனை யாற்றிமால் விடைக்கொடிப் பெருமானின், புதிய பூங்கழல் அருச்சனைப் பேற்றினாற் புள்ளிறை மிடல் எய்தி, அதிர்வு றுத்தெமை அலைத்திட வெரீஇயினம் அடைக்கலம் புகுந்தேம் யாம், கதிஎ மக்குவே றில்லைஎன் றிரத்தலுங் கண்ணுதல் அருள்கூர்ந்து 4 நூல் விதித்தப்படி சிவபூசனையை இயற்றிப் பெருமையுடைய விடைக் கொடியை உயர்த்திய சிவபெருமானின் புதிய மலர்போலும் கழலணிந்த திருவடிகளை அருச்சித்த சிவபுண்ணியத்தினால் கருடன் வலிமை உற்று எம்மை அச்சுறுத்தி வருத்திட யாம் அஞ்சினோம்; சரணடைந்தோம்; அடைக்கலம் புகுமிடம் வேறில்லை’ என்று குறையிரத்தலும் கண்ணுதலோன் அருள் மிகுந்து, பன்ன கங்களைப் பணியெனத் தாங்கினன் பன்னகா பரணன்றன் இன்ன ருட்பெறும் மதுகையான் மற்றவை எந்தைபால் அரியோடும் துன்னு வெம்பகைக் கலுழனைக் ‘கலுழனே சுகங்கொல்’ என்றஞ்சாமே, பன்னி மேன்மையின் வினாயின இம்மொழி பாரெலாம் எடுத்தோதும். |