சீத்தீசப் படலம் கொச்சகக் கலிப்பா மருக்காவி வண்டூத மதுஊற்றும் வாவித் திருக்காயா ரோகணத்தின் சீர்மைஇது சொற்றாம் கருக்காயும் மற்றதற்கு வடகீழ்சார் கண்டோர் தருக்காத சித்தீசந் தன்னியல்பு சொல்வாம். 1 | நறுமணத்தையுடைய குவளைமலர் வண்டு நுகர மதுவை ஊற்றும் தடாகத்தைக் கொண்ட திருக்காயாரோகணத்தின் சிறப்புடைமையைக் கூறினாம். பிறவியைப் போக்குகின்ற காயாரோகணத்திற்கு வடகிழக்கில் தரிசித்தோர் மலவலிகெடுதலின் முனைப் பிழத்தற்கேது வாகிய சித்தீசத்தின் தன்மையைக் கூறுவாம். ஊதுதல்-நுகர்தல் (கலி. மரு 1: 7) எண்சீரடி யாசிரிய விருத்தம் கம்பை மாநதி யின்க ரைப்பெருங் காதல் கூர்தவம் ஆற்று மால்வரைக், கொம்பு மஞ்சளின் காப்ப ணிந்துமெய் குளிர ஆடுநீர் மணங்க மழ்ந்தெழூஉப், பம்பு மஞ்சள்நீர் நதிஎ னப்புடை பரந்து சேறலும் பாய்பு னற்சடை, எம் பிரான் அருள் பொங்கும் ஓகையின் இலிங்க மாய்அவண் எழுந்து தோன்றினான். 2 கம்பாநதியின் கரையில் பெருங்காதல் மிகத்தவமாகிய பூசனையைச் செய்யும் இமயப் பெருமலை பயந்த பூங்கொம்புபோல்வாராகிய உமா தேவியார் மஞ்சட் காப்பினைத் திருமேனியிலணிந்து அம்மேனிபடிய ஆடிய நீர் நறுமணம் வீசி எழுந்து நிறைந்த மஞ்சள் நீர் நதியாக அப்பக்கங்களிற் பரவிச் செல்லும் அளவிலே பாய்ந்து வந்த கங்கையை ஏற்ற சடையுடைய எம்பெருமான் அருள் மிகும் உவகையால் அந்நதிக்கரையில் சிவலிங்க வடிவில் வெளிப்பட்டு விளங்கினான். மேனியைக்காத்தலின், மஞ்சட் காப்பு, நெல்லிக்காப்பு என இவ்வாறு கூறுதல் வழக்கு. கூடுகொள்கையால் குலவு மஞ்சள்நீர்க் கூத்த னென்றுபேர் கொண்ட நாயகன், ஆடு தாளிணை சித்தர் பற்பலர் அணைந்து போற்றிவான் சித்தி எய்தலாற், பாடு சான்றசித் தீச னாம்பெயர் பார்வி ளங்கும்அவ் வண்ணல் சந்நிதி, மாடு கூவல்ஒன் றுன்னி னோர்க்கெலாம் வழங்கு சித்திசால் சித்த தீர்த்தமே. 3 கூடிய கொள்கையொடுந் திகழும் ‘மஞ்சள் நீர்க்கூத்தர்’ என்று திருப்பெயரேற்ற முதல்வர் ஆடுகின்ற திருவடிகளைச் சித்தர் பலரும் அணைந்து துதித்துச்சிறந்த சித்திகளைப் பெறுதலால் பெருமை நிரம்பிய சித்தீசப்பெயர் உலகிடை விளங்கும் அம்முதல்வர் சந்நிதியின் பக்கத்தில் கிணறொன்று கருதினோர் யாவர்க்கும் அருளும் சித்தி நிறைந்த சித்த தீர்த்தம் உள்ளது. 33 |