26காஞ்சிப் புராணம்


பெடையுடன் பெரிதும் ஊடியும் பெரிதும் ஊடலைப் போக்கியும், பெரிதும்
கூடியும் காதலை வென்ற வீரரைத் தடைப்படுத்தும்.

     இதனைக் காமோத்தீபனம் என்ப. ஆடவர்-வீரர் என்ற குறிப்பினது,
தூதுணம் புறா, துணை என்னும் பறவைக் கருப்பொருளும் பிரிதலென்னும்
உரிப்பொருளும் வந்தன.

வெங்க திர்ப்பிரான் நண்பகற் போதினில் வேனில்
மங்கை கொங்கைதோய்ந் தளித்திடும் பாலையாம் மைந்தன்
அங்கண் நானில வரசர்பா லிரந்துவன் முரம்பு
தங்கு சூழலிற் சிற்றர சாள்வதும் உளதால்.      55

     சூரியன், வேனிற் பருவமாகிய மங்கையொடு கூடியவழித் தோற்றிய
பாலை என்னும் மகன், குறிஞ்சி முதலாகிய நானில அரசரிடத்து, இரந்து
பெற்ற திண்ணிய மேட்டு நிலங்களில் சிற்றரசு புரிதலும் ஆங்குளது.

முல்லை

நவிலும் இந்நிலப் புறம்பயில் புறவநன் மடந்தை
குவிவ ருந்தழல் வெம்மைகூர் கொடும்பசி தணியச்
செவிலி யாய்முகில் தீம்பயம் ஊட்டிட வளர்ந்தாங்
கவிழு நீள்வர காதியாம் மகப்பயந் தளிக்கும்.     56

     மேகமாகிய செவிலித்தாய் விரிந்த தழலாகிய வெப்பம் மிகுகின்ற
கொடிய பசி தணிய இனிய பாலாக நீரூட்டி, முல்லை நிலமாகிய நன்மகளை
வளர்ப்ப வளர்ந்த அந்நிலையில் குருத்து விரிகின்ற வரகு முதலிய
(புன்செய்ப்பயிர்) மகவுயிர்த்து அந்நில மக்களைக்காக்கும்.

கொல்லை யெங்கணுங் கொழுமலர் ததைபுன முருக்கின்
முல்லை மென்கொடி படர்ந்தலர் நிரைநிரை முகிழ்ப்ப
அல்லை வென்றகந் தரப்பிரான் அரக்கெறி மார்பில்
தொல்லை வெண்டலை மாலிகை துயல்வரல் மானும்.   57

     முல்லை நிலத்தின்கண் எவ்விடத்தும் செழுவிய மலர் செறிந்த காட்டு
முருங்கை மரத்தில் மெல்லிய முல்லைக்கொடி படர்ந்து வரிசை வரிசையாக
மலர் அரும்புதல், இருளை வென்ற நீல மணிமிடற்றினோன் தனது
செவ்வொளி வீசும் திருமார்பிற் பிரமனாதியர் வெண்டலை மாலை
அசைதலை  ஒக்கும்.

     நீலமுண்டும் நித்தியனாக, விண்ணோர் அமுதுண்டும் வெண்டலை
மாலையாதல் கருதத் தக்கது.

நீலம் பூத்தமலர் பூவையைக் கோட்டுநீள் கரத்தாற்
கோலம் பூத்தபொற் கொன்றைகள் தழீஇக்கிடந் தசைவ
ஆலம் பூத்தருள் மிடற்றினோன் அன்றுமோ கினியாஞ்
சீலம் பூத்தமால் இளமுலை திளைப்பது தெளிக்கும்.     58