திருமால் சாபம் பெறல் கண்டு மாழ்கினன் துயரின் மூழ்கினன் கண்கள் சேந்தனன் இதழ்து டித்தனன், மண்டு வெங்கனற் பொறிதெ றிப்ப அம் மாத வன்றனை வெகுண்டு நோக்கினான், ஒண்ட ளிர்க்கரத் தரிவை தன்னைமற் றுனக்கு மாமியைத் தறுக ணாளனாய், மிண்டி னாற்கொலை செய்து வீட்டினாய் வெய்ய பாவிநீ உய்யு மாறெவன். 5 கண்டு மயங்கினர்; துன்பக்கடலில் மூழ்கினர்; கண்கள் சிவந்தனர்; வாயதரம் துடித்தனர்; மிகுந்த வெய்ய நெருப்புப் பொறிகள் தெறிக்க அத்திருமகள் நாயகனைச் சினந்து பார்த்தனர். நிறமமைந்த மாந்தளிர் போலும் கையுடைய அரிவையை மேலும் உனக்கு மாமியை வன்கண்மை யனாய் வலிமையாற் கொலை செய் தழி்த்தனை. கொடும்பாவி நீ எங்ஙனம் பிழைப்பாய். எடுத்தி யம்பிய சைவ மேஎவற் றுள்ளும் உத்தம மென்னில் யாங்களும், கடுத்த தும்பிய கண்ட னாரடிக் கமல மன்றிவே றறிகிலேமெனில், தொடுத்து ரைக்கும்இச் சத்தி யத்தினால் துயரு ழந்து நீ நரக வல்வினை, மடுத்த வெம்பிறப் பொருப தெய்துக வழுவு பாதகக் குழிசி யாயினாய். 6 குற்றமுடைய பாதகத்திற்குப் பாத்திரமானவனே! எச்சமயத்திற்கும் மேம்பட உயர்த்திக் கூறப்பெற்ற சைவமே தலையாய சமயமென்னில், யாங்களும் விட மிகுந்த களத்தினையுடைய சிவபிரானார் திருவடித் தாமரைகளை அன்றி மற்றோர் தெய்வத்தைக் கனவிலும் மதியே மெனில், இவற்றொடு தொடர்பு படுத்துக் கூறும் இம்மொழி சத்தியமே ஆனால் துன்பத்தில் துளைந்து நீ கொடிய நரகுபோலும் துன்பத்தினை உட்கொண்ட கொடிய பிறவி ஒருபத்தில் உழல்வாயாக. குழிசி-பாத்திரம். ‘‘பாதகக் குழிசிப் புலைஉடல்’’ 116-ஆம் பக்கம்) காண்க. நின்ற னக்கடித் தொண்டு பூண்டவர் நெறிய லாப்புறத் தாற்று நூல்வழித், துன்று தீக்கையுற் றென்றும் முப்புரஞ் சுட்ட எம்பிரான் திருவ டிப்பிழைத் தொன்று மூன்றுதண் டேந்தி ஈனராய் உலப்பி லாதவெந் நிரைய மேவுக, மன்ற அங்கவர்க் கண்டு ளோர்களும் மறலி ஊரினைக் குறுகி மாய்கவே. 7 நினக்குச் சேவை செய்வோர் சிவநெறி யல்லாத புறச் சமயநூல் வழிப் பொருந்திய தீக்கையை அடைந்து முப்புரத்தைச் சிரித்தெரித்த பெருமான் திருவடித் தொண்டினில் வழுவி ஏக தண்டம், திரிதண்டம் தாங்கி இழிசனராய்க் கரையேறலாகா தகடுநரகினைப் பொருந்துக. அவரை மதித்தொழுகினோரும் நிச்சயமாக, இறந்து இயமன் இருக்கையை எய்தி நரகிடைக் கிடக்க. |