கருடனை ஊர்தியாகவுடைய திருமால், சிவகங்கையில் நீராடி எழுச்சியுற்று ஒற்றைமாமரத்தின் நிழலில் எழுந்தருளியுள்ள ஏகாம்பர நாதர் திருவடிகளைத் துதிசெய்து போய் அவ்விடத்தில் தவச்சாலை ஒன்றமைத்துச் சிவலிங்கம் தாபித்துக் காதல் கூரப் பூசனை செய்து போற்றிப் பொருந்துமா றருள் பெற்றுப் பெருந்தவத்தைச் செய்ய லுற்றனன். பூதி மேனியன் நெற்றி தீட்டுமுப் புண்ட ரத்தினன் அக்கமாலையன், சீத வேணியோன் திருஉ ருத்திரஞ் செப்பு நாவினன் அடகு நீர்கனி, வாத உண்டியன் பிரமம் ஐவகை மனுக்கணித்துளக் கமலம் நள்ளுற, மாது பாகனை இருத்தி ஐந்தழல் மத்தி நின்றருந் தவம்உ ஞற்றினான். 11 விபூதியை உத்தூளனமாகத் திருமேனியிலும், திரிபுண்டரமாக நெற்றியிலும் அணிந்தும், உருத்திராக்க வடம்பூண்டும், கங்கையைச் சடையில் தரித்த பெருமான் சீருத்திரம் நாவாற் கணித்தும், இலையும், நீரும், பழமும் காற்றும் ஆகிய இவற்றை உணவாகக் கொண்டும், ஐவகையாகிய பஞ்சப்பிரம மந்திரத்தைக் கணித்தும், உள்ளத் தாமரையின் நடுவிற் பொருந்த மங்கை பங்கனை எழுந்தருளுவித்துப் பஞ்சாக்கினி மத்தியில் நின்றரிய தவத்தைப் புரிந்தும் விளங்கினன். திருமால் இறைவன் திருவருள் பெறுதல் இன்ன வாறுபல் லாண்டு மாதவம் இவன் இயற்றுழி முக்கண் நாயகன், பொன்இ மாசலப்பூவை தன்னொடும் புடைமி டைந்துபல் கணங்கள் போற்றுறப், பன்னும் அவ்விலிங் கத்தி னின்றெழூஉப் பாய்வி டைப்பரி மேல்அ ணைந்துநீ, நன்னர் வேட்டன கூறுகென்றலும் நறுந்து ழாய்மலர்ப் படலை மோலியான். 12 இங்ஙனம் பல வருடங்கள் பெருந்தவத்தைத் திருமால் புரியுங்கால் கண்ணுதலோன் அழகிய இமய வல்லியொடும் பல பூதகணங்கள் நெருங்கிப் போற்றுதல் நிகழத்துதிக்கும் அச்சிவலிங்கத்தினின்றும் வெளிப்பட்டுப் பாய்ந்து செல்லும் இடப ஊர்திமேல் எழுந்தருளி நீ விரும்பிய நல்வரங்களைக் கூறுக என்ற அளவிலே நறிய துளவ மாலையையணிந்த அம்மால். எட்டு றுப்பினும் ஐந்து றுப்பினும் இருநி லத்திடை வீழ்ந்து வீழ்ந்தெழுந், தட்ட மூர்த்தியாய் போற்றி என்னையாள் அண்ணலே அடி போற்றி என்வினைக், கட்ட றுத்தவா போற்றி மாறிலாக் கருணை வெள்ளமே போற்றி போற்றிஎன், றுட்ட தும்பிய காதலால்தொழு துருகி நீர்விழி சொரிய விள்ளுவான். 13 அட்டாங்க பஞ்சாங்க வணக்கங்களால் பலமுறையும் வீழ்ந்தெழுந்து, ‘அட்டமூர்த்தி வடிவினனே வணக்கம்; அடியேனை ஆளாகக் கொண்ட தலைவனே திருவடிக்கு வணக்கம்; வினைப்பாசம் அறுத்தவனே |